ஆடி திருவிழா.. கள்ளழகர் கோவிலில் தேரோட்டம்.. பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி கதவு திறக்கப்போகுது!

Aadi Festival in Madurai : கள்ளழகர் கோவிலில் நாளை ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமும், பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியின் கதவுகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

Jul 20, 2024 - 07:35
Jul 20, 2024 - 11:01
 0
ஆடி திருவிழா.. கள்ளழகர் கோவிலில் தேரோட்டம்.. பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி கதவு திறக்கப்போகுது!
Kallagar Temple therottam in Madurai

Aadi Festival in Madurai : சித்திரை திருவிழாவிற்கு அடுத்தபடியாக கள்ளழகர் கோவிலில் ஆடி மாத பிரம்மோற்சவம் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆடி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளைய தினம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க காரைக்குடியில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பாரம்பரியமான மாட்டுவண்டியில் பயணம் செய்து வந்து வந்துள்ளனர். 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவில் மகாவிஷ்ணுவின் நூற்றியெட்டு வைணவ தலங்களில் ஒன்றாகவும் பிரசித்தி பெற்றதாகவும் விளங்ககூடியது. இங்கு சித்திரை மாதம் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் திருவிழாவும், ஆடி மாத தேரோட்டமும் உலக பிரசித்தி பெற்றது. 

10 நாட்கள் நடைபெறும் ஆடி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதனைத்தொடர்ந்து நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை 21ஆம் தேதி ஆடிப் பௌர்ணமியன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

அழகர்கோவில் ஆடித்திருவிழாவில் பங்கேற்க கோ.வேலங்குடியைச் சேர்ந்த நாட்டார்கள் மற்றும் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில் நேற்று முன்தினம் புறப்பட்டு நேற்று மேலூர் வந்தடைந்தனர். இவர்கள் அனைவரும் அழகர்கோவிலில் முடி காணிக்கை செலுத்திவிட்டு ராக்காயி அம்மன் கோவிலில் தீர்த்தமாடி விட்டு கள்ளழகர், பதினெட்டாம்படி கருப்பசுவாமியை தரிசனம் செய்கின்றனர்.
நாளை 100க்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி உறவினர்களுக்கும், பொதுமக்களுக்கும் விருந்து உபசரிப்பு செய்கின்றனர். 

வேலங்குடியைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். அழகர்கோயிலில் நடக்கும் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து பாரம்பரியமாக மாட்டுவண்டி கட்டி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். நாளைய தினம் ( ஜூலை 21) பௌர்ணமி நாளில் தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்புகின்றனர். இந்த பாரம்பரியம் நான்கு தலைமுறையாக தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.

ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான இன்று இரவு (ஜூலை 20) கள்ளழகர் தங்க குதிரையில் எழுந்தருளும் நிகழ்வும்,  நாளை ( ஜூலை 21) திருத்தேரோட்டம் நிகழ்வும், மாலையில் பதினெட்டாம் படி கருப்பண சுவாமி சன்னதியின் கதவு திறப்பு நிகழ்வும் நடைபெறும். ஜூலை 23ஆம் தேதி உற்சவ சாந்தி நிகழ்வும் ஆகஸ்ட் 4ம் தேதி மாலை நேரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளும் நீங்கள் நடைபெற உள்ளதாக கோவிலின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டு ஆடி மாத பௌர்ணமி நாளில் அழகர் கோவிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில் கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கும். 18 படிகளிலிலும் தீபம் ஏற்றப்பட்டு கதவுகள் திறக்கப்பட்ட உடன் கூடியிருக்கும் பக்தர்கள் எழுப்பும் கோவிந்தா முழக்கம் மெய் சிலிர்க்கும். பதினெட்டாம்படி கருப்பசாமி மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும் மதுரை சுற்றுவட்டார மக்களுக்கும் காவல் தெய்வமாகவும் குல தெய்வமாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow