சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்.. கனகசபை தரிசனம் கிடைக்குமா? ஹைகோர்ட் உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் விழாவின் போது, கனகசபை மீது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படாத நிலையில், விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாமென அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jul 9, 2024 - 12:31
 0
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்.. கனகசபை தரிசனம் கிடைக்குமா? ஹைகோர்ட் உத்தரவு
Chidambaram natarajar temple


சிதம்பரம் நடராஜர் கோவில் சிவபெருமானின் பஞ்சபூதங்களில் ஆகாயத்தலமாக போற்றப்படுகிறது.பஞ்சசபைகளில் பொற்சபையாகவும் வணங்கப்படுகிறது. இந்த ஆலையத்தில் ஆண்டு தோறும் ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சன நிகழ்வும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன திருவிழாவும் சிறப்பாக நடைபெறும். 

இத்திருக்கோயிலில் மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பாகும். அருள்மிகு சபாநாயகர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர ரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்தது. கொரோனா காலத்திற்குப் பிறகு பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இந்த கோவில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

நடராஜர் கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியதாக பக்தர்கள் தரப்பில் பெரும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு வந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு சிதம்பரத்தை சேர்ந்த பெண் ஒருவர் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ததற்காக அங்குள்ள தீட்சிதர்களால் கண்டிக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய கோவில் தீட்சிதர்கள் தடை விதித்திருந்தனர்.

இதையடுத்து சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பக்தர்களை அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், தமிழக அரசு இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் அரசாணை பிறப்பித்தது.

தீட்சிதர்கள் விதித்த தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு பரிசீலனை செய்து, நடராஜர் திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படியும், பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும் அருள்மிகு நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்தது.

கடந்த ஆண்டு ஆனி திருமஞ்சன விழாவை ஒட்டி 4 நாட்கள் பக்தர்கள் கனகசபை ஏறுவதற்கு தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சர்ச்சைக்கு இடையே அறநிலையத்துறை அதிகாரிகள் நடராஜர் கோவிலுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஏராளமானோர் கனகசபை மீதேறி சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை முதல் மூன்று நாட்கள் ஆனி திருமஞ்சன விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது பக்தர்கள், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும்  நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படாததால், விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் எனவும், சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு  எதிராக அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டு காலமாகவே சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் விழா நடைபெறும் போல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு எந்த பிரச்சினையும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாகும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow