Chennai Rain : சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை.. ஆரஞ்ச் அலர்ட்.. 16 மாவட்ட மக்களே உஷார்!

Heavy Rain in Chennai : விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையில் பல சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. மழை 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Aug 5, 2024 - 06:09
Aug 5, 2024 - 11:34
 0
Chennai Rain : சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை.. ஆரஞ்ச் அலர்ட்.. 16 மாவட்ட மக்களே உஷார்!
today weather update chennai rain

Heavy Rain in Chennai : சென்னையில் கடந்த சில நாட்களாக வெப்பம் சுட்டெரித்த நிலையில் ஞாயிற்றுகிழமை மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், குளுமையான நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்(Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக இருந்து வருகிறது. காலை 9 மணிக்கு மேல் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. மாலை 5 மணி வரை வெயில் நீடித்தது. அதே நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் என்பது இரவு வரை நீடித்தது. வெப்பத்தின் தாக்கத்தால் சென்னைவாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதேபோல நேற்றும் காலை முதல் சென்னை முழுவதும் வெயில் வாட்டி எடுத்தது. 

இந்த நிலையில் மாலை 5 அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்ந்தன.  மாலை நேரமே இரவு போல மாறிய நிலையில் பலத்த காற்றுடன், மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது. அதன் பிறகு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இந்த திடீர் மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் குளுகுளுவென மாறியது. 

மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, திருவான்மியூர், ராயப்பேட்டை, அண்ணாசாலை, எழும்பூர், சென்ட்ரல், திருவல்லிக்கேணி, சேத்துப்பட்டு, அமைந்தகரை, அண்ணாநகர், பெரம்பூர், பாரிமுனை, தண்டையார் பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை பெய்தது.

சற்று நேரம் விட்டு விட்டு இரவு நேரங்களிலும் மழை நீடித்தது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. விடாது பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 30-40 கிமீ வேகத்தில் தரைக்காற்றும் வீசக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow