'துரை தயாநிதி நன்றாக உள்ளார்'... சிஎம்சி மருத்துவமனை விளக்கம்! வதந்'தீ'க்கு முடிவு எப்போது?

சமூகவலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காக பலர் பயன்படுத்தி வரும் நிலையில், சில விஷமிகள் இவற்றை வதந்திகளை பரப்புவதற்கே பயன்படுத்தி வருகின்றனர்.

Jul 8, 2024 - 15:36
Jul 8, 2024 - 17:36
 0
'துரை தயாநிதி நன்றாக உள்ளார்'... சிஎம்சி மருத்துவமனை விளக்கம்!  வதந்'தீ'க்கு முடிவு எப்போது?
துரை தயாநிதி

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க. அழகிரி. ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் அரசியலில் கலக்கிய மு.க. அழகிரி தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகி உள்ளார். மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி, தொழில்அதிபராக உள்ளார். பல்வேறு திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் மனைவி, 2 மகன்களுடன் வசித்து வந்த துரை தயாநிதி, கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மருத்துவர்கள் பரிசோதனையில் அவரது மூளையில் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  பின்பு இதற்காக வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போலோ மருத்துவமனையில் சுமார் 3 மாதங்கள் சிகிச்சை பெற்ற துரை தயாநிதி, பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக துரை தயாநிதியின் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவியது. இதைப் பார்த்து துரை தயாநிதியின் நண்பர்கள், ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், துரை தயாநிதியின் உடல்நிலை குறித்து வேலூர் சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ''துரை தயாநிதி மிகவும் ஆரோக்கியமாக உள்ளார். துரை தயாநிதி உடல்நிலை தொடர்பாக தவறான தகவல் பரவி வருகிறது. இதுபோன்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்'' என்று சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் துரை தயாநிதி நலமுடன் இருக்கிறார். அவர் எழுந்து நடக்கிறார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதேபோல் பாஜகவின் மூத்த தலைவர் 96 வயதான எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக தலைநகர் டெல்லியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வீடு திரும்பினார். அத்வானி வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவரது உடல் நிலை தொடர்பாகவும் சமூகவலைத்தளங்களில் தவறான தகவல் பரவியது. 

காலமாற்றத்திற்கே வாட்ஸ்-அப், 'எக்ஸ்' தளம், பேஸ்புக் உள்ளிட்ட  சமூகவலைத்தளங்களின் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சமூகவலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காக பலர் பயன்படுத்தி வரும் நிலையில், சில விஷமிகள் இவற்றை வதந்திகளை பரப்புவதற்கே பயன்படுத்தி வருகின்றனர்.

அண்மை காலமாக நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்களின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கூட பிரபல தொகுப்பாளர் அப்துல் ஹமீதின் உடல்நிலை குறித்து சமூகவலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்துல் ஹமீது, ''நான் நல்ல நிலையில் இருக்கிறேன். வதந்திகளை நம்பாதீர்கள்'' என்று வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வதந்திகளுக்கு உள்ளாகும் பிரபலங்களின் உறவினர்கள், நண்பர்களின் மனம் எவ்வளவு பாதிக்கப்படும் என்பதை சமூகவலைத்தளங்களின் வதந்தி பரப்பும் நபர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனியாவது இதுபோன்ற நபர்கள் சமூகவலைத்தளங்களை வதந்திக்கு பயன்படுத்தாமல் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow