குட் மார்னிங் வேண்டாம்.. ஜெய்ஹிந்த் சொல்லுங்க.. ஹரியானா பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தேசப்பற்று நாட்டின் மீதான பெருமையை உணர்த்தும் வகையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் பள்ளிகளில் காலையில் குட் மார்னிங்கிற்கு பதில் ஜெய்ஹிந்த் என சொல்ல மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

Aug 10, 2024 - 08:53
 0
குட் மார்னிங் வேண்டாம்.. ஜெய்ஹிந்த் சொல்லுங்க.. ஹரியானா பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
jaihind

சண்டிகர் : காலை வணக்கத்திற்கு பதிலாக மாணவர்கள் ஜெய் ஹிந்த் சொல்ல வேண்டும் என ஹரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் முதல் பள்ளிகளில் காலையில் குட் மார்னிங்கிற்கு பதில் ஜெய்ஹிந்த் என சொல்ல மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பட்டுள்ளது.


ஜெய் ஹிந்த் என்பது ஏதோ இரண்டு வார்த்தைகள் அல்ல. அது எழுச்சி கோஷம். இந்தியாவின் சுதந்திரத்தோடு பின்னிப்பிணைந்த கோஷம். இந்தியனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் நெருக்கமாக இருக்கும்  நெருக்கமாக இருந்த வேண்டிய முழக்கம். இதனால்தான் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு வெளியிட்ட முதல் அஞ்சல் தலையின் மேல் வலது மூலையில் ''ஜெய் ஹிந்த்'' என்ற வார்த்தைகள் இடம்பெற்றன. ''இந்தியா வாழ்க'' என்பதையும் ''இந்தியா வெல்க'' என்பதையும் ஒருசேர உணர்த்துகிறது ஜெய்ஹிந்த் என்ற வாசகம்.

சுதந்திரம் பெற்ற நள்ளிரவில் பிரதமர் ஜவஹர்லால் நேரு அளித்த பிரபல உரைகூட இறுதியில் ஜெய்ஹிந்த் என்றுதான் முடிந்தது.இந்த கோஷத்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கினார் என்பது பொதுவான பிம்பம். ஆனால் உண்மை வேறு. ஜெய்ஹிந்த் என்பதை முதலில் உருவாக்கியவர் செண்பகராமன் பிள்ளை. விக்கிடி என்ற பெயரில் அதிகம் அறியப்பட்டவர். பிறந்தது திருவனந்தபுரத்தில் என்றாலும் அவரது பெற்றோர் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இளம்வயதிலேயே ஐரோப்பாவுக்குச் சென்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தவர். இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர்.

இந்த கோஷத்தைப் பின்னர் சுபாஷ் சந்திரபோஸ் பரவலாக்கினார். அவருக்கு இந்த கோஷத்தை நினைவுபடுத்தியவர் அப்போது ஹைதராபாத் கலெக்டராக இருந்த ஜெய்னுல் ஆபிதீன் என்பவர். பின்னர் சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் மேஜராக விளங்கினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தன் ராணூவப் படையை உருவாக்குவதற்கு முன் இந்தியர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது ஜெய் மா துர்கா, சலாம் அலைக்கும், ஸத் ஸ்ரீ அகல் என்பதுபோல அவரவர் மதத்தை நினைவு படுத்தும்படி முகமன் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் நேதாஜி தன் ராணூவத்தினர் ஒன்றிணைந்த பாரதப் பிரதிநிதிகளாக அனைவருக்கும் ஒரு மாதிரியான கோஷத்தைத் தேர்வு செய்ய விரும்பினார். அப்போது ஜெய்னுல் ஆபிதீன் 'ஜெய்ஹிந்த்' கோஷத்தை முன்வைக்க, சுபாஷ் சந்திர போஸுக்கு மிகவும் பிடித்துப் போனது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஜெய் ஹிந்த் என்பது சுதந்திர நாட்டின் விடுதலைச் சின்னமாகவே ஆனது. இந்தியாவை ஆட்சி செய்த அத்தனை பிரதமர்களும் தங்கள் உரையில் ஜெய்ஹிந்த் என்று கூறுவதை வழக்கமாக்கிக் கொண்டனர். இந்திரா காந்தி தனது அரசியல் உரைகளின் இறுதியில் மூன்று முறை அடுத்தடுத்து ஜெய்ஹிந்த் என்று கூறி அந்த கோஷத்தை மக்களையும் எதிரொலிக்கச் செய்வார். பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பேதமின்றி பணிபுரியும் இந்திய ராணுவத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதெல்லாம் ஜெய்ஹிந்த் என்று கூறுவதை இப்போதும் கேட்கலாம்.

குஜராத் அரசும் மத்தியப் பிரதேச அரசும் சில வருடங்களுக்கு முன் பள்ளிச் சிறுவர்கள் வருகைப்பதிவேட்டின்போது ஜெய் ஹிந்த் என்று கூறுவதைக் கட்டாயமாக்கியது. இளம் வயதிலேயே தேசப்பற்றை கிடைக்க இது உதவும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் தேசப்பற்று நாட்டின் மீதான பெருமையை உணர்த்தும் வகையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் பள்ளிகளில் காலையில் குட் மார்னிங்கிற்கு பதில் ஜெய்ஹிந்த் என சொல்ல மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என ஹரியானா மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. 

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தும் போது, மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வைத் தூண்டும். தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் தியாகங்கள் பற்றி அறிந்துகொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். 

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் மாணவர்களின் எதிர்காலப் பங்கை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களும் சக ஊழியர்களுக்கு வணக்கம் என்று கூறுவதற்கு பதிலாக, ஜெய்ஹிந்த் என்று சொல்ல துவங்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


அம்மாநில கல்வி அமைச்சர் சீமா த்ரிகா, "ஜெய் ஹிந்த் எனும் சொல்லை வாழ்த்துச் சொல்லாக ஏற்றுக்கொள்வதன் மூலம், நமது மாணவர்கள் எல்லைகளை காக்கும் வீரர்களை நினைவுகூர வேண்டும் என்று விரும்புகிறோம். ராணுவ வீரர்களை கவுரவிப்பதன் மூலம், மாணவர்கள் இயல்பாகவே ஒழுக்கமானவர்களாக மாறுவார்கள்.  குறைந்தபட்சம் அனைத்து அரசு ஊழியர்களும் ஹாய், ஹலோ, குட் மார்னிங் என சொல்வதற்கு பதிலாக 'ஜெய் ஹிந்த்' என்று சொல்லத் தொடங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow