வயநாடு நிலச்சரிவு.. ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி ஆய்வு.. பாதிப்பை விளக்கிய பினராயி விஜயன்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக பல நூறு உயிர்களை காவு வாங்கிய வயநாட்டில் பிரதமர் மோடி இன்று ஆய்வு மேற்கொண்டார்.நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலையை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கினார்.

Aug 10, 2024 - 09:17
Aug 10, 2024 - 14:44
 0
வயநாடு நிலச்சரிவு.. ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி ஆய்வு.. பாதிப்பை விளக்கிய பினராயி விஜயன்
modi visit wayanad

திருவனந்தபுரம்: நிலச்சரிவு ஏற்பட்ட கேரளா மாநிலம் வயநாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார் . கேரள அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து இருக்கும் நிலையில், மோடியின் இந்த பயணத்திற்கு பிறகு இது தொடர்பாக முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளவில் உள்ள வயநாடு பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சூரல் மலை, முண்டக்கை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் அடித்து செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் உடைமைகளை இழந்தனர்.உறவினர்களையும் வாழ்விடங்களையும் இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஒரே நாளில் அத்தனையும் மாறிப்போன மக்களுக்கு யாராலும் ஆறுதல் கூற முடியாது. 

நிலச்சரிவினால் மக்கள்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.  வயநாடு நிலச்சரிவால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அளவிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளில் எளிமையான முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாடுமாறும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமானோர் கோடிக்கணக்கான ரூபாய்களை நிவாரணமாக அளித்து வருகின்றனர்.நிலச்சரிவில் சிக்கி 413 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு வாரத்துக்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒட்டு மொத்த தேசத்தையும் கேரள நிலச்சரிவு சம்பவம் அதிரவைத்தது. 

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மோகன்லால், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். கேரளாவின் வயநாட்டிற்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்க்கசிகள் முன்வைத்து வந்தன. இந்த நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடி இன்று வயநாடு சென்றுள்ளார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி கண்ணூர் சென்றடைந்தார். கண்ணூர் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, முதல்வர் பினராயி விஜயன், கேரள மாநில ஆளுநர் ஆரிப் கான் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதியை பார்வையிட்டனர்.

பிரதமர் மோடியின் வயநாடு பயணத்தையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ.2 ஆயிரம் கோடி நிதி உதவி வேண்டும் என கேரள அரசு கோரிக்கை வைத்துள்ளது. இத்தகைய சூழலில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்கிறார். நிலச்சரிவினை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கேரளா முன்வைத்துள்ளது. இதனால் பிரதமர் மோடியின் வயநாட்டு பயணத்திற்கு பிறகு கேரளா நிலச்சரிவுக்கு அளிக்கப்படும் நிதி உதவி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow