குவஹாத்தியில் தேவிகளின் தரிசனம் - தீரா உலா 1

மூன்று நாட்கள் குளிக்காத தேகத்தின் எண்ணெய்ப் பிசுக்கும், உடையில் படிந்திருக்கும் அழுக்கும் ஒரு வித நமைச்சலைக் கொடுக்கவே முதலில் குறைந்த வாடகையில் விடுதி பிடித்து குளித்தால் போதும் என்றிருந்தது. ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள பான் பஜாரில் உள்ள ஒரு விடுதியில் அறை கிடைத்தது.

Aug 4, 2024 - 05:00
Aug 5, 2024 - 10:27
 0
குவஹாத்தியில் தேவிகளின் தரிசனம் - தீரா உலா  1
தீரா உலா 1

சலனமின்றிச் சீராகப் பாய்கிற ஆற்றில் விழுகிற ஓர் இலை எத்தனை தூரம் பயணிக்கும் என்பதை ஆற்றின் போக்குதான் தீர்மானிக்கும். அது போன்றுதான், இந்தியாவைச் சுற்ற வேண்டும் என கன்னியாகுமரியில் இருந்து ரயில் ஏறிய எனக்குள் பயணத் திட்டம் என எதுவும் இருக்கவில்லை. பயணத்தின் போக்கே அதனைத் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்றிருந்தேன். இலக்கற்ற பயணம் என்றாலும் இந்தியாவின் பன்மைத்துவத்தை சற்றேனும் கண்டுணர வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. 

தெற்கு எல்லையான கன்னியாகுமரியில் இருந்து வடகிழக்கு விளிம்பான திப்ருஹார் வரை 4156 கிமீ தொலைவு பாய்கிற விவேக் எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவின் மிக நீண்ட தூரம் பயணிக்கும் ரயில். அந்த ரயிலில் கன்னியாகுமரி – திப்ருஹார் வரையிலான பயணத்தை முன்பதிவு செய்தது மட்டுமே நான் முன்கூட்டித் திட்டமிட்டது. கோடை விடுமுறையை எதிர்நோக்கும் பள்ளி மாணவனைப் போல, முன்பதிவு செய்த தினத்திலிருந்து பயணம் தொடங்கவிருக்கும் நாளை தினமும் எண்ணிக் கொண்டிருந்தேன். நாட்கள் நெருங்க நெருங்க உற்சாகம் என்னுள் ததும்பிக் கொண்டே இருந்தது. அது நிரம்பி வழிந்து விடும் அபாயமும் இருப்பதை நினைத்த போது குழந்தைத்தனம் என்னுள் இன்னும் குடிகொண்டிருப்பதை உணர்ந்து சிரித்தேன். 2023ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி இந்தப் பயணம் தொடங்கியது. 

கன்னியாகுமரியில் ரயில் ஏறியதும் நெடுநாள் காத்திருப்பின் அற்புத விளைவினை உணர முடிந்தது. குதியாட்டம் போட வேண்டும் எனுமளவு மகிழ்ச்சி பெருக்கெடுத்திருந்தது. அண்ணன் தமிழ்ச்செல்வன் என்னை வழியனுப்புவதற்காக வந்திருந்தார். ரயில் கிளம்பும் வரையிலும், இனி நான் எதிர்கொள்ளவிருக்கும் பேரனுபவத்தில் எப்படி மூழ்கித் தொலையப்போகிறேன் என்பதை பெரும் பரவசத்தோடு சொல்லிக் கொண்டிருந்தேன். ரயில் கிளம்பியதும் அவர் விடை கொடுத்துச் சென்ற பிறகு என்னைத்தவிர அப்பெட்டியில் யாருமில்லை. 

பெட்டி முழுவதிலுமுள்ள காலி இருக்கைகளில் எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம், படுக்கலாம். பெட்டியின் இருமுனைக்கும் ஓடலாம், களிப்புற்றுக் காது கிழியக் கத்தலாம். ரயிலின் ‘டொடக் டொடக்’ சத்தமும், காற்றின் ரீங்காரத்தையும் தவிர வேறெந்த அரவமும் இல்லாத அத்தனிமை வசீகரமாய் இருந்தது. நாகர்கோயிலைத் தாண்டி கேரளாவுக்குள் நுழைந்த பிறகு பயணிகள் சன்னமாக ஏறினார்கள். மேல் படுக்கை எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது ஏமாற்றம்தான். ஜன்னலின் வழியே பின்னோக்கி விரையும் நிலக்காட்சிகளைப் பார்த்தபடியே பயணிப்பதுதான் எப்போதும் எனக்கு உவப்பானதாக இருக்கும். எல்லா நேரத்திலும் எல்லாம் சாத்தியப்படுவதில்லைதானே.

தூங்கி விட்டு அடுத்த நாள் காலையில் எழுந்து பார்க்கையில் பெட்டி முழுவதும் பயணிகள் நிறைந்திருந்தார்கள். அவர்களது பேச்சொலி ரயிலின் சத்தத்தை விட மிகுதியாகக் கேட்டது. நடப்பதற்கு இருப்பதே குறுகிய பாதைதான், அதிலும் தங்களது லக்கேஜ்களை வைத்திருந்தனர். இரு முனைகளிலும் கதவை ஒட்டிய பகுதிகளில் முன்பதிவு செய்யாதவர்கள் தஞ்சம் புகுந்தவர்களைப் போல நின்றிருந்தனர். அப்பெட்டியே ஒரு சந்தைக்கடையைப் போல சத்தக்காடாகியிருந்தது. மேற்கு வங்கத்தைத் தாண்டும் வரையிலும் இந்த இரைச்சலும், நெரிசலும் இருக்கும் என்பது முன் அனுபவத்தில் தெரிந்ததுதான். அசாமின் பெரிய நகரான குவஹாத்தியைத் தாண்டி விட்டால், வழித்தெடுக்கப்பட்டதைப் போல பெரும்பாலான இருக்கைகள் காலியாகக் கிடக்கும்.

நெடுந்தொலைவு ரயில் பயணங்களுக்கு நன்றாகவே பழக்கப்பட்டிருந்தபடியால் எதுவும் எனக்குப் பிரச்னையாகத் தோன்றவில்லை. உட்கார்ந்தபடியும், படுத்தபடியும் ‘நெருஞ்சி’ எனும் நாவலைப் படித்தேன். இளையராஜா மெல்லிசைப் பாடல்களைக் கேட்டபடியே பகலில் சில நேரங்கள் தூங்கினேன். மேலே இருந்தபடியே கீழே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ரயிலில் பல மாநிலங்களைச் சேர்ந்த பல விதமான மனிதர்களைப் பார்க்க முடியும். குடும்பமாக வருகிறவர்கள் வீட்டிலேயே சமைத்து எடுத்து வந்த உணவைத் தட்டுகளில் இட்டு மகிழ்ச்சியாக உண்பார்கள். குழந்தைகள் ரயிலுக்குள்ளேயே ஓடி விளையாடுவார்கள். சலிக்காமல் பேசுகிறவர்கள், பேச ஆளின்றி அமைதியாகக் கிடப்பவர்கள், குட்கா போட்டு விட்டு ரயிலின் வேகம் குறையும்போது ஜன்னல் வழியே உமிழ்கிறவர்கள் என பலரது நடவடிக்கைகளைக் காணலாம். உள்ளூர் வியாபாரிகள் என்னென்ன பொருட்களைக் கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தால் நன்றாகவே நேரத்தைக் கடத்த முடியும்.

நெடுந்தொலைவு பயணிக்கும் ரயில்களைப் பொறுத்த வரை கால தாமதம் ஏற்படுவது இயல்பானது. ரயில் குவஹாத்திக்கே 6 மணி நேரம் தாமதமாகத்தான் வந்தது. அங்கிருந்து திப்ருஹார் செல்ல நள்ளிரவாகலாம் எனத் தோன்றியது. அது மட்டுமின்றி, ரயில் கழிவறைகளில் தண்ணீர் வராததால் பயன்படுத்த முடியாத அவலம். இவற்றின் காரணமாக குவஹாத்தியிலேயே இறங்க வேண்டியதாகி விட்டது.

மூன்று நாட்கள் குளிக்காத தேகத்தின் எண்ணெய்ப் பிசுக்கும், உடையில் படிந்திருக்கும் அழுக்கும் ஒரு வித நமைச்சலைக் கொடுக்கவே முதலில் குறைந்த வாடகையில் விடுதி பிடித்து குளித்தால் போதும் என்றிருந்தது. ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள பான் பஜாரில் உள்ள ஒரு விடுதியில் அறை கிடைத்தது. சோப்புக் கட்டியை முழுவதும் கரைத்து விடும் மூர்க்கத்தோடு அழுக்குத் தீரத் தீரக் குளித்தேன். புதுப்பொலிவு கண்ட உணர்வோடு உடை மாற்றி விட்டு காமாக்யா கோயிலுக்குக் கிளம்பினேன்.

குவஹாத்தி ரயில் நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவில் இருக்கிறது காமாக்யா கோயில். பொதுப்போக்குவரத்து வசதி மேம்பட்டிருக்கும் அந்நகரில் இருந்து கோயில் அடிவாரத்துக்குப் பேருந்தில் சென்றேன். அக்கோயில் மலை மேல் அமையப்பெற்றிருக்கிறது. மேலே செல்ல மின்சாரப் பேருந்துகள் மற்றும் கணிசமான அளவில் ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன. இருந்தும், அப்போதிருந்த மன நிலையில் நடந்தே செல்வது உவப்பானதாக இருந்தது.

மலை என்று அதனைக் குறிப்பிடுவதை விட குன்று என்பதே சரியான பதமாக இருக்கும். அப்பாதை நெடுகிலும் மரங்கள் விசிறியடிக்கும் காற்று என்னைத் தடவிச் சென்றது இதமாக இருந்தது. பக்கவாட்டுச் சுவர்களில் புராணக்கதைகளின் காட்சிகள் வரையப்பட்டு சிமெண்டில் மோல்ட் செய்யப்பட்டிருந்தது. பாதி தொலைவில் ஒரு காட்சி முனை இருந்தது. அங்கிருந்து கீழே தெரியும் நகர்ப்பகுதியைப் பார்க்கலாம். பலரும் அம்முனையில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர்.  சூரியன் இறங்கிக் கொண்டிருக்கும் அந்தி வேளையில் காமாக்யா தேவி கோயிலை நெருங்கினேன். அர்ச்சனைப் பொருட்கள் விற்கும் கடை வரிசையே நான் கோயிலை நெருங்கி விட்டதை உணர்த்தியது.

இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் இந்த காமாக்யா கோயிலே மிகவும் தொன்மையானது என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலில் பெண்ணுறுப்பான யோனிதான் மூலமாக இருக்கிறது. காமாக்யா தேவியின் பெண் குறிதான் இங்கு வழிபடப்படுகிறது. பெண் குறி என்பது காமம் சார்ந்தது மட்டுமல்ல, அதன் வழியேதான் பிறப்பு நிகழ்கிறது என்பதால் அது தாய்மையின் அடையாளமாகவும் கருதி வணங்கப்படுகிறது. உயிரைப் பிறப்பிக்கிற ஆற்றல் பெண் வசம் இருப்பதால் பெண் குறியை வழிபடும் வழக்கம் தொல்குடி மரபிலேயே இருக்கிறது. இந்து மதக் கோயிலில் இப்படியொரு வழிபாட்டு முறையை அதற்கு முன் நான் கேள்விப்பட்டிருக்கவில்லை என்பதால் அதனைக் கண்டு வழிபடும் ஆர்வம் எனக்குள் மிகுதியாக இருந்தது.  

காமாக்யா தேவியின் சந்நிதிக்குள் நுழைந்தேன். வழிபாட்டு வரிசையில் பெருங்கூட்டமாய் மக்கள் நின்றிருந்தனர். மாலை 5 மணிக்கு வழிபாட்டு வரிசை மூடப்பட்டு விடும். அதற்குள்ளாக வந்து வரிசையில் நிற்பவர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.

காமாக்யா தேவி சந்நிதியைச் சுற்றியிருந்த  திரிபுரசுந்தரி,  கமலா,  மாதங்கி ஆகிய தேவியரின் சந்நதிகளுக்கும் சென்று வழிபட்டேன். கோயில் சுவற்றில் விநாயகர் உருவம் சாந்தால் வடிக்கப்பட்டிருந்தது. அச்சாந்தினுள் நாணயத்தைக் காணிக்கைப் போலப் பதித்து வழிபடுவதைக் கண்டேன். வழிபாட்டு முறையே முற்றிலும் வேறுபட்டிருப்பதை ஒவ்வொன்றாகக் கவனித்தேன். கோயிலின் வெளிப்புறத் தூண்களில் வடிக்கப்பட்டிருந்த சிற்பங்கள் அக்கோயிலின் தொன்மையைக் கூறும்படியாக வரலாற்றுப் பெறுமதி கொண்டிருந்தன. படையெடுப்புகளால் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்ட வரலாறு இக்கோயிலுக்கும் இருக்கிறது. கோயிலின் வலப்புறத்தே அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளில் உட்கார்ந்தபடி கோயிலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எந்தச் சலனமும் இல்லாமல் வெறுமனே கிடப்பதின் உன்னதத்தை அனுபவித்துதான் உணர இயலும்.

பயணக்களைப்பு முழுதாக நீங்கவில்லை. நல்ல தூக்கம் தரும் ஆசுவாசம்தான் அப்போதைய தேவையாக இருந்தது. ஆகவே, இருள் கவியத் தொடங்கியதும் கோயிலில் இருந்து கிளம்பி எனது விடுதிக்குச் சென்றேன். வழி நெடுக அருணாச்சலப் பிரதேசத்தின் முக்கிய பௌத்த நகரான தவாங் செல்லும் பயணத்திட்டம் எனக்குள் விரிந்து கொண்டிருந்தது. கடந்த ஆண்டு மேற்கொண்ட வடகிழக்குப் பயணத்தின்போதே தவாங் நகருக்குச் சென்றிருந்தேன். தவாங்கைத் தாண்டியிருக்கும் இந்திய – சீன எல்லைப்பகுதியான பும்லா பாஸுக்கு அப்போது செல்ல முடியவில்லை. ஆகவே இம்முறை பும்லா பாஸ் செல்லும் நோக்கோடு தவாங் செல்லத் திட்டமிட்டேன்.

ரெட் பஸ் அப்ளிகேஷன் மூலம் குவஹாத்தியில் இருந்து தவாங்குக்கு அடுத்த நாள் காலை 11.30 மணிக்கு பேருந்து முன்பதிவு செய்தேன். போர்டிங் பாய்ண்ட் ஐ.எஸ்.பி.டி என்று காட்டியது. குவஹாத்தி ரயில் நிலையத்தை ஒட்டியே ஒரு பேருந்து நிலையம் இருக்கிறது. அதுதான் குவஹாத்தி நகருக்கான பேருந்து நிலையம் என்றே நினைத்திருந்தேன். எனது விடுதிக்குப் பக்கத்தில்தானே இருக்கிறது என அடுத்த நாள் 11 மணிக்குதான் விடுதி அறையைக் காலி செய்து விட்டுப் புறப்பட்டேன்.

ஆட்டோக்காரரிடம் ஐ.எஸ்.பி.டி செல்ல வேண்டும் எனக் கேட்கையில் இந்தியில் அவர் ஏதோ சொல்லி மூன்று விரல்களைக் காட்டினார். 30 ரூபாய் என்கிறார் போல என நினைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறினேன். தீர்மானித்திருந்த தொலைவைக் காட்டிலும் ஆட்டோ சென்று கொண்டிருப்பதைக் கண்டு குழப்பத்தோடு “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டேன். ஐ.எஸ்.பி.டி இன்னும் 8 கிலோ மீட்டர் போக வேண்டும் என்று சொன்ன போது எனக்குள் கனத்த அதிர்ச்சி. குவஹாத்தி ரயில் நிலையத்தை ஒட்டியிருக்கும் பேருந்து நிலையம் அசாம் மாநிலத்துக்குள் பயணிக்கும் பேருந்துகளுக்கானது மட்டுமே என்பது புரிந்த போது பேருந்து ஓட்டுநரிடம் இருந்து அழைப்பு வந்தது. மணி 11.30 ஆகியிருந்தது. 

- கி.ச.திலீபன்

- உலவித்திரிவோம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow