சென்னைக்கு சத்ரபதி சிவாஜி வந்தாரா? இல்லையா?
சிதம்பரம் ரகசியம் போன்று நூற்றாண்டுகளாக வராலாற்றில் அவிழ்க்கப்படாத ஒரு புதிராக இருந்து வருவது சென்னைக்கு சத்ரபதி சிவாஜி வந்தாரா? இல்லையா? என்பது தான்... காரணம் சிவாஜி எதற்காக சென்னைக்கு வரபோகிறார்? அதுவும் சென்னையில் கைப்பற்றும் அளவிற்கு அப்படி என்ன சர்ச்சையோ அல்லது பொருளோ இருந்தது? என்ற கேள்விகள் எழாமல் இல்லை... அவற்றிற்கெல்லாம் விடையளிக்கும் விதமாக ஒரு முக்கிய சான்றாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறது ஒரு கோயில்... ’யாதுமாகி நின்றாய் காளி’ என்று பாரதியார் வழிப்பட்ட அந்த காளி குடியிருக்கும் பாரிஸ் கார்னரில் உள்ள ‘காளிகாம்பாள் கோயில்’...
ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றுவதற்கு முன்பான காலம் அது... வங்கக் கடலில் படகு ஓட்டி, கடலை சுற்றியே தங்கள் வாழ்வாதாரத்தை கொண்டிருந்த மீனவ சமூக மக்கள் வசித்த சிறிய மீனவ கிராமத்தின் நம்பிக்கையாக உருவெடுத்திருந்தாள் சென்னியம்மன். காலப்போக்கில் சென்னியம்மன் குப்பம் என்று அழைக்கப்பட்ட இந்த கிராமத்தின் பெயரில் இருந்துதான் சென்னை என்ற பெயர் உருவானதாகக் கூட சொல்லப்பட்டது.
நாயக்கர் காலக்கட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் திருப்பணிகளுக்காக விஸ்வகர்மா சமூகத்தினர் சென்னையில் குடியேறியதாகவும், அப்போது திருவண்ணாமலையில் இருந்து அவர்கள் கல் எடுத்து வந்த இந்த கோயிலைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் ஜார்ஜ் கோட்டை உருவானபோது இக்கோயிலை அதனுள் அடக்கிக் கொண்டதோடு, கோட்டைக்குள் கோயில் இருந்ததால் கோட்டை அம்மன் என்று இக்கோயில் அழைக்கப்பட்டது.
காலப்போக்கில் கோட்டையில் இருந்து வெளியில் வந்த அம்மன், பாரிஸ் கார்னரில் உள்ள தம்புச் செட்டி தெருவில் தனக்கான நிரந்தர இடத்தை பெற்றுக் கொண்டாள். என்னத்தான் இடமாறியிருந்தாலும், முத்துசாமி ஆச்சாரி என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த கோயிலுக்கான மவுஸ் குறைந்தபாடில்லை. காலங்கள் செல்ல செல்ல இந்த கோயிலுக்கு விவிஐபிக்களும் வருகை புரிய, விஐபி கோயிலாகியது காளிகாம்பாள் கோயில்.
குறிப்பாக சத்ரபதி சிவாஜி வருகைக்கு பிறகு இந்த கோயிலின் மவுஸ் எகிறியதாகக் கூறப்படுகிறது. வேலூர், ஆற்காடு, செஞ்சி ஆகிய பகுதிகளை கைப்பற்றிய சத்ரபதி சிவாஜியின் அடுத்த டார்கெட் சென்னையாக இருந்ததாகக் கூறப்பட்டது. இதனால் பதறிப்போன சென்னை ஆளுநர் ஸ்ட்ரெயின்ஷாம், சிவாஜி கேட்ட விலை உயர்ந்த கற்களையும், விஷமுறிவு மருந்துகளையும் பணவாங்காமல் இலவசமாக கொடுத்து அனுப்பினார். காரணம், சிவாஜியின் வீரத்தை சூரத்தில் இருந்த ஆங்கிலேயர்களின் கோட்டையை கைப்பற்றியபோது அதனை நேரில் கண்டிருந்தார் ஸ்ட்ரெயின்ஷாம்.
முதல் இரண்டு முறை சிவாஜியின் தூதவராக வந்தவர் பொருட்களை கேட்ட நிலையில், மூன்றாவது முறை ஆங்கிலேய பொறியாளர்களை சிவாஜி அழைக்கிறார் என்று தூது கொண்டுவந்தார். இதனை ஆங்கிலேயர்கள் ஏற்க மறுக்க, சிவாஜி சென்னை மீது நிச்சயம படையெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில அரசியல் மாற்றங்கள் காரணமாக தனது ராஜ்ஜியத்திற்கே சிவாஜி சென்றதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் தான் சென்னைக்குள்ளே சத்ரபதி சிவாஜி வரவில்லை என்று ஒருசாரார் கூறுகின்றனர், இல்லை இல்லை காளியின் பக்தரான சத்ரபதி சிவாஜி காளிகாம்பாள் கோயிலுக்கு யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் வந்து காளியை தரிசித்து சென்றிருந்தார் என்று மறுபக்கம் கூறப்படுகிறது.
என்னத்தான் அதற்கான சான்று இல்லையென்றாலும், இன்றளவும் காளிகாம்பாள் திருக்கோயிலில் அக்டோபர் 3, 1677ல் சிவாஜி வந்து காளியை தரிசித்தார் என்று குறிப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படியாக சிவாஜி வந்தாரா? இல்லையா? என்ற ரகசியதோடே விளங்கிக் கொண்டிருக்கிறது காளிகாம்பாள் கோயில்...
What's Your Reaction?