'நான் அப்பவே சொன்னேன்.. எல்லாம் நாடகம்'.. வினேஷ் போகத் காங்கிரசில் இணைந்தது குறித்து பிரிஜ் பூஷன்!

''ஒரு வீரர் ஒரே நாளில் இரண்டு எடைப்பிரிவு போட்டிகளில் பங்கேற்றது எப்படி என்பது குறித்து வினேஷ் போகத்திடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் மல்யுத்த போட்டிகளில் வெற்றி பெறவில்லை. ஏமாற்றி பைனல் வரை சென்று விட்டீர்கள். அதற்காகத்தான் கடவுள் உங்களை தண்டித்தார்'' என்று பிரிஜ் பூஷன் கூறியுள்ளார்.

Sep 7, 2024 - 15:33
 0
'நான் அப்பவே சொன்னேன்.. எல்லாம் நாடகம்'.. வினேஷ் போகத் காங்கிரசில் இணைந்தது குறித்து பிரிஜ் பூஷன்!
Brij Bhushan And Vinesh Phogat

டெல்லி: 90 தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக அங்கு மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் தீவிரமாக உள்ளது. இதேபோல் இந்த முறை கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டு விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.

இதற்கிடையே மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்த இருவரும் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டனர். 

காங்கிரஸில் இணைந்தது குறித்து விளக்கம் அளித்த வினேஷ் போகத், ''மல்யுத்தத்தின்போதும், பல்வேறு பிரச்சனைகளின்போதும் எனக்கு ஆதரவாக இருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லி சாலையில் நாங்கள் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டபோது, காங்கிரஸ் எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் காங்கிரசில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.பெண்களுக்கு ஆதரவாக எங்களின் குரல் பலமாக ஒலிக்கும். நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது'' என்றார்.

இதனைத் தொடர்ந்து ஹரியானா தேர்தலில் 31 வேட்பாளர்களை கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. அதில், மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் காங்கிரஸ் சார்பில் ஜூலானா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த ஆண்டு இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் மீது வினேஷ் போகத் உள்ளிட்ட பல்வேறு மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். பிரிஜ் பூஷனுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நீண்டநாள் போராட்டமும் நடத்தினார்கள். போராட்டம் நடத்திய வினேஷ் போகத் உள்ளிட்ட வீராங்கனைகள் தரதரவென இழுத்து செல்லப்பட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஆனால் மத்திய பாஜக அரசு, பிரிஜ் பூஷனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு பதக்க கனவுடன் வந்த வினேஷ் போகத் உடல் எடை அதிகரிப்பு காரணம் காட்டி திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா காங்கிரசில் இணைந்தது குறித்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  பேசிய அவர், ''கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே ஜனவரி 18ம் தேதி இருவரும் தங்களின் அரசியல் சதியை (டெல்லியில் நடந்த போராட்டம்) தொடங்கி விட்டனர். அன்றைய தினமே அனைத்தும் தொடங்கி விட்டது. அப்போதே நான் இதை நான் அரசியல் சதி என்று கூறினேன்.

இதில் காங்கிரசுக்கு தொடர்பு உள்ளது. தீபந்தர் ஹோடா, பூபிந்தர் ஹோடா ஆகியோருக்கும் இதில் தொடர்பு உள்ளது. அப்போதே அனைத்து கதைகளும் எழுதப்பட்டு விட்டன. அது மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டம் கிடையாது. அவர்கள் பெண்களுக்காக போராடவில்லை; அரசியலுக்காக போராடினார்கள். இப்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் இந்த விஷயத்தில் நாடகமாடியது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஒரு வீரர் ஒரே நாளில் இரண்டு எடைப்பிரிவு போட்டிகளில் பங்கேற்றது எப்படி என்பது குறித்து வினேஷ் போகத்திடம் கேட்க  விரும்புகிறேன். நீங்கள் மல்யுத்த போட்டிகளில் வெற்றி பெறவில்லை. ஏமாற்றி பைனல் வரை சென்று விட்டீர்கள். அதற்காகத்தான் கடவுள் உங்களை தண்டித்தார்'' என்று பிரிஜ் பூஷன் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow