சிலை செய்ய முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் முடிந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
பண்ருட்டி அருகே விநாயகர் சிலை செய்வதற்காக களிமண் எடுக்க சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி அருகே விநாயகர் சிலை செய்வதற்காக களிமண் எடுக்க சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடைவீதிகளில் விநாயகர் சிலை உட்பட பூஜை பொருட்களின் விற்பனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் பூஜை பொருட்களை வாங்கி சென்று வருகின்றனர். சென்னையில் முக்கிய வீதிகளில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் தடுக்க தமிழக முழுவதும் சென்னை முழுவதும் 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு இரண்டு காவலர்கள் வீதம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பதட்டமான இடங்களான திருவல்லிக்கேணி, சூளை உள்ளிட்ட இடங்களை கண்டறிந்து அங்கு எஸ் ஐ தலைமையில் நான்கு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி சிசிடிவி காட்சிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர்ச்சியாக காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நிலவ, பண்ருட்டியில் ஒரு குடும்பத்தில் ஒரு பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் பிரசன்னா (வயது 8) அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் பிள்ளையார் செய்வதற்காக களிமண் எடுப்பதற்கு அதே பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஏரிக்கரை ஓரமாக களிமண் எடுத்துக் கொண்டிருந்த பொழுது சிறுவன் சேற்றில் சிக்கி உள்ளார். இதனால் வெளிவர முடியாமல் தவித்த அச்சிறுவன் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சிறுவன் நீரில் மூழ்கி இருப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் உடலை மீட்டு உடல் கூராய்வுக்கு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் படிக்க: ஹரியானா தேர்தலில் வினேஷ் போகத் போட்டி… காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்!
மேலும் சிறுவன் உயிரிழப்பு குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?