கோவையில் எரிந்த நிலையில் ஆசிரியை உடல் கண்டெடுப்பு...களத்தில் இறங்கிய போலீஸ்...வெளிவந்த புதிய தகவல்

வழக்கம் போல் பள்ளிக்குச் கிளம்பிச் செல்வது போன்று செல்கின்ற காட்சிகள் பதிவாகி உள்ளது

Mar 19, 2025 - 17:55
Mar 19, 2025 - 19:31
 0
கோவையில் எரிந்த நிலையில் ஆசிரியை உடல் கண்டெடுப்பு...களத்தில் இறங்கிய போலீஸ்...வெளிவந்த புதிய தகவல்

கோவை அருகே எரிந்த நிலையில் ஆசிரியை உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆங்கில ஆசிரியை

கோவை, மதுக்கரை அருகே நாச்சிபாளையம் பகுதியில் நேற்று காலை அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்து உள்ளது.வழுக்குப்பாறை அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி வந்த பத்மா (56) என்ற பெண், எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பத்மா, நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதாகக் கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். ஆனால் அவர் பள்ளிக்குச் செல்லவில்லை. மாறாக, அவரது வீடு இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள குப்பை எரிக்கும் இடத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டு உள்ளார். அவரது உடல் எரிந்த நிலையில் இருந்ததால், இது கொலையா ? அல்லது தற்கொலையா ? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.சம்பவம் குறித்து மதுக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் விசாரணை

 பத்மாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதில், அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருப்பது தெரியவந்து உள்ளது. மேலும், பத்மா பல்வேறு பிரச்னைகளால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சம்பவம் நடந்த இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்து விட்டு பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இது சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பத்மா நேற்று காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்து இருந்தனர். அவரது வாகனம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். அவருக்கு பல பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், விசாரணை முடிவில் தான் உண்மை தெரியவரும் என்று தெரிவித்தார். 

சி.சி.டி.வி. காட்சி 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மக்களிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பத்மாவின் செல்போன் மற்றும் பிற மின்னணு சாதனங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் வீட்டில் இருந்து பத்மா தன்னுடைய இருசக்கர வாகனம் மூலம் கிளம்பிச் சென்ற சி.சி.டி.வி. காட்சி தற்போது வெளியாகி உள்ளது. அதில் வழக்கம் போல் பள்ளிக்குச் கிளம்பிச் செல்வது போன்று செல்கின்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையின் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

read more : இஸ்லாமியர்கள் குறித்த கமெண்ட்.. மீண்டும் சிக்கலில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow