இஸ்லாமியர்கள் குறித்த கமெண்ட்.. மீண்டும் சிக்கலில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!
த.வெ.க சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சி மற்றும் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய திமுக தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் அரசியல் மேடை பேச்சாளர்களில் ஒருவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.அசிங்கமான வார்த்தைகளை அநாவசியமாக பேசுவதை தொடர் கதையாக வைத்து வந்தார். சில நாட்களாக இவர் மீது புதியதாக குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் சமீபத்தில் இஸ்லாமியர்கள் குறித்து இவர் அடித்த கமெண்ட்கள் எதிர்கட்சிகளால் விவாதத்துக்கு உள்ளானது.
கட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை:
இந்நிலையில், தமிழ்நாடு முஸ்லீம் லீக் நிறுவனத்தலைவர் முஸ்தபா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு-
”தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சி குறித்தும், இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையிலும் திமுக தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி முதல்வர் பிறந்த நாள் நிகழ்வு மேடையில் மிகவும் அவதூறு பரப்பும் வகையில் பேசி உள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இஸ்லாமியத்திற்கு ஆதரவு என்று சொல்லிக்கொள்ளும் திமுக கட்சி ரீதியாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எதுவும் எடுக்கவில்லை, காவல்துறை சார்பிலும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மிகவும் அச்சத்துடன் இஸ்லாமியர்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய பாதுகாவலர் என திமுக போலி வேஷம் போட்டு, வஞ்சித்து வருகிறது. த.வெ.க சார்பில் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்ச்சியில் நோன்பு இருந்து, கட்சி அடையாளாமின்றி விஜய் கலந்து கொண்டார். இஸ்லாமியர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.
வருத்தம் தெரிவித்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி:
முன்னதாக அரசியல் மேடைகளில் தொடர்ந்து அநாகரீகமாக பேசி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு திமுக கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட வரலாறு திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி-க்கு உண்டு. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இஸ்லாமியர்கள் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியதையடுத்து, அவர் தன் தரப்பில் வீடியோ ஒன்றினை பகிர்ந்தார்.
என் அன்பு இஸ்லாமிய உறவுகளே...
நான் பேசிய கருத்தை வேறுவிதமாக எதிர்க்கட்சிகள் திரித்து பரப்புகின்றனர்.
நான் பயன்படுத்திய வார்த்தை உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்
What's Your Reaction?






