வனவிலங்குகள் உயிரிழப்பு.. கேபிள் மூலம் மின்சார வழங்கும் திட்டம் அறிமுகம்..!
கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் மின்சாரம் தாக்கி வனவிலங்குகள் உயிரிழப்பதை தவிர்க்க, தொரப்பள்ளியில் இருந்து தெப்பக்காடு வரை 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேபிள் மூலம் மின்சார வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை புலி மாஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் மற்றும் அரிய வகை பறவைகளின் வசிப்பிடமாக உள்ளதால் வனவிலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து ரூ.5 கோடி நிதி மின்வாரியத்துக்கு செலுத்தப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தொரப்பள்ளியில் இருந்து தெப்பக்காடு வரை சுமார் 11 கி. மீட்டர் தூரம் கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லும் திட்ட பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து 30 அடி உயரமுள்ள 580 இரும்பு கம்பங்கள் வனத்தில் நடப்பட்டது. பின்னர் தொரப்பள்ளியில் உள்ள மின் மாற்றியில் இருந்து முதுமலை தெப்பக்காடு வரை மும்முனை மின்சாரம் கேபிள் வழித்தடம் மூலம் கொண்டு செல்வதற்கான பணிகள் 6 மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் கேபிள் வழித்தடம் மூலம் மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை சோதனை அடிப்படையில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பூஜையுடன் நடைபெற்றது.
நீலகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் கேபிள் வழித்தடம் மூலம் மின்சாரம் செல்வதற்காக மின்மாற்றியை செயல்படுத்தி தொடங்கி வைத்தார்.
இது குறித்து மேற்பார்வை பொறியாளர் சேகர் கூறும் போது, வனத்துக்குள் மின்சாரம் தாக்கி வனவிலங்குகள் பாதிக்காமல் இருக்க உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் கூடலூரில் இருந்து தெப்பக்காடு வரை கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. மீதமுள்ள வனப்பகுதியில் கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்வதற்கான பணிகள் இனிவரும் நாட்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமார், வனச்சரகர்கள் விஜய், சிவக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார் மின்வாரிய பணியாளர்கள், வனத்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






