"முதல்வர் எங்கள சந்திக்கல" மாஞ்சோலை மக்களிடம் ஓரவஞ்சனை? நெல்லையில் பரபரப்பு!
நெல்லையில் கடந்த 8 மாதங்களாக போராடி வரும் மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திப்பதாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களை சந்திக்காமல் சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் வெடித்த பரபரப்பு ஏற்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக கள ஆய்வு பணிகளை செய்வது, திட்டப்பணிகளை தொடங்கி வைப்பது என பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில், நெல்லை மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள முதலமைச்சர், கங்கைகொண்டானில் சோலார் தொழிற்சாலையை தொடங்கிவைத்துவிட்டு, 5 கிமீ ரோடு ஷோ சென்றார்.
இதற்கு முன்பு, முதலமைச்சர் தங்கியிருந்த நெல்லை வண்ணாரப்பேட்டை விருந்தினர் மாளிகையில் காலை 8 மணிக்கு மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து உரையாடவிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் முதலமைச்சரை காண வேண்டும் என்பதற்காக இரவு 12 மணிக்கே புதிய பேருந்து நிலையம் வந்த மாஞ்சோலை தொழிலாளர்கள், கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் கொசுக்கடியில் படுத்து, காலையில் விருந்தினர் மாளிகை முன்பு குவிந்தனர்.
ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ, மாஞ்சோலை மக்களிடம் பேசாமல் வேனில் அமர்ந்தபடியே மனுக்களை மட்டும் பெற்றுக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சளுக்கு ஆளான மாஞ்சோலை தொழிலாளர்கள், அரசு தங்களை வஞ்சிப்பதாக கூறி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது, முதலமைச்சரை சந்திக்க காலையிலேயே வந்ததாகவும், ஆனால் முதலமைச்சர் ஐந்து பேரை மட்டும் உள்ளே அழைத்து மனுவை பெற்றுக்கொண்டதாகவும் கூறினர். பிறகு வேறொருவர் வந்து உங்கள் பிரச்னையை பேசி விட்டோம் போங்கள், போங்கள் என விரட்டியதாகவும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்கள் குறைகளை கூறவந்த மாஞ்சோலை பகுதி மக்களை, முதல்வர் சந்திக்காமல் வஞ்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?