மைசூரில் இருந்து சென்னை வழியே பீகார் செல்லும் தர்பாங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (அக். 11) இரவு பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 7.30 மணி அளவில் புறப்பட்டு பீகார் நோக்கி சென்று கொண்டிருந்தது. 22 பெட்டிகளைக் கொண்ட இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யும் பெட்டிகளில் சுமார் 1300க்கும் மேற்பட்ட பயணிகளும், முன்பதிவு இல்லாத இரண்டு பெட்டிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட பயணிகள் என 1500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். பொன்னேரி ரயில் நிலையத்தை கடந்து கவரைப்பேட்டை ரயில் நிலையம் நெருங்கும்போது திடீரென இந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது.
ஆந்திரா செல்லும் மார்க்கத்தில் பிரதான தண்டவாளத்தில் வருவதற்காக சிக்னல் கொடுக்கப்பட்டிருந்த சூழலில் பிரதான தண்டவாளத்தை தவிர்த்து அருகில் இருக்கக்கூடிய லூப்லைன் எனும் தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 75 கிமீ வேகத்தில் வந்து முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த இன்ஜின் மற்றும் 13 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் எக்ஸ்பிரஸ் ரயிலின் சரக்குகளை ஏற்றி செல்லும் முதல் பெட்டி தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. மூன்று பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து வெளியே வந்து கவிழ்ந்தன. விபத்தினால் அதிர்ச்சியடைந்த ரயில் பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அலறி அடித்தபடி இறங்கி தலைதெறிக்க ஓடினர். விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ரயில் விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருபவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் காயமுற்றுள்ள பயணிகளுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் விவரம் குறித்து மருத்துவமனை டீனிடம் கேட்டறிந்தார். இதையடுத்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை உடனுக்குடன் அளிக்கவும் ஆலோசனை வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “விபத்துக்குள்ளான பகுதிக்கு உடனடியாக சென்று அமைச்சர்களும், அதிகாரிகளும் மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பாக 22 ஆம்புலன்ஸ்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை எந்த உயிரிழப்புகளும் இல்லை. ரயில் விபத்துகள் தொடர்கதையாவதை மத்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.