சென்னையில் சோகம்.. நடுவானில் மலேசிய பெண்ணிற்கு ஏற்பட்ட நெஞ்சுவலி..!

மஸ்கட்டில் இருந்து கோலாலம்பூருக்கு விமானம் சென்று கொண்டிருந்த போது நடுவானில் மலேசிய பெண்ணிற்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், சென்னையில் அவசரமாக தரையிறங்கியும் காப்பாற்ற முடியாமல் உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Feb 7, 2025 - 19:49
 0
சென்னையில் சோகம்.. நடுவானில் மலேசிய பெண்ணிற்கு ஏற்பட்ட நெஞ்சுவலி..!
சென்னையில் சோகம்.. நடுவானில் மலேசிய பெண்ணிற்கு ஏற்பட்ட நெஞ்சுவலி..!

ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூருக்கு ஓமன் ஏர்லைன்ஸ் விமானம், 242 பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வான் வெளியை பறந்து கொண்டு இருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த மலேசிய நாட்டைச் சேர்ந்த காலிஜா (41) என்ற பெண்ணுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்தார். இதை அடுத்து பெண்ணின் கணவர் அபூபக்கர், விமான பணி பெண்களிடம் அவசர உதவி கேட்டார்.

இதை அடுத்து விமான பணிப்பெண்கள்  பெண் பயணிக்கு அவசரமாக முதல் உதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டியது இருந்ததாக தலைமை விமானியிடம் கூறினர். விமானம், சென்னை அருகே வானில் பறந்து கொண்டிருந்ததை தலைமை விமானி அறிந்தார். உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விமானத்தில் பெண் பயணிக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதால் சென்னையில் அவசரமாக தரையிறங்க அனுமதி வேண்டும் என்று கேட்டார். 

இதை அடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மனிதாபிமான அடிப்படையில் ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தை சென்னையில் தரை இறங்க அனுமதி அளித்தனர். மேலும் சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினருக்கும் அவசரமாக  தகவல் தெரிவித்து, தயார் நிலையில் விமான நிலைய ஓடுபாதை அருகே இருக்க செய்தனர். 

விமானம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பிற்பகல் 2.40 மணிக்கு அவசரமாக தரை இறங்கியது. உடனடியாக விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் ஏறி பெண் பயணியை பரிசோதித்த போது, கடுமையான மாரடைப்பு காரணமாக ஏற்கனவே உயிர் இழந்துவிட்டார் என்று தெரிய வந்தது.

சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குடியுரிமை சட்டத்தின்படி உள்ள நடைமுறைகள் முடிவடைந்த பின் பெண் பயணி உடல் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டது. மேலும் பெண்ணின் கணவர் அபூபக்கருக்கும், குடியுரிமை அதிகாரிகள் தற்காலிக விசா வழங்கினர். அவரும் விமானத்தில் இருந்து கீழே இறங்கி விட்டார். சென்னை விமான நிலைய போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சென்னையில் உள்ள மலேசிய நாட்டு தூதரக அதிகாரிகளுக்கும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து பெண் பயணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தினர். அதில் அபூபக்கர், அவர் மனைவி காலிஜா ஆகியோர் ஒரு குழுவாக, மக்காவிற்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர். அந்தப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு, சொந்த நாட்டுக்கு திரும்பி கொண்டு இருந்த போது தான், சோகமான நிலை ஏற்பட்டு உள்ளது. சொந்த நாட்டிற்கு செல்வதற்கு முன் இந்தியாவில் மலேசியப் பெண்ணின் உயிர் பிரிந்துள்ளது என்று  தெரிய வந்தது.

இதை அடுத்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் மீதமுள்ள 240 பயணிகளுடன் இன்று மாலை 5.30 மணி அளவில், சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow