காங்கிரசில் இணைந்தனர் வினேஷ் போகத்-பஜ்ரங் புனியா.. ஹரியானா தேர்தலில் போட்டியா?
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் மீது வினேஷ் போகத் உள்ளிட்ட பல்வேறு மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். பிரிஜ் பூஷனுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நீண்டநாள் போராட்டமும் நடத்தினார்கள். போராட்டம் நடத்திய வினேஷ் போகத் உள்ளிட்ட வீராங்கனைகள் தரதரவென இழுத்து செல்லப்பட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெல்லி: ஹரியானா மாநிலத்தில் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
ஆளும் பாஜக அங்கு மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் தீவிரமாக உள்ளது. இதேபோல் இந்த முறை கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டு விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருவதால், அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். 30 வயதான இருவரும் இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்வேவை சந்தித்து காங்கிரசில் இணைந்துள்ளனர்.
இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட மல்லிகார்ஜூன கார்கே, ''சக் தே இந்தியா.. சக் தே ஹரியானா. உலக அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய திறமைமிக்க சாம்பியன்கள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியாவை சந்தித்தேன். உங்களால் நாங்கள் பெருமைப்படுகிறோம்'' என்றார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால், ''இன்று காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய நாள்'' என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து விளக்கம் அளித்த வினேஷ் போகத், ''மல்யுத்தத்தின்போதும், பல்வேறு பிரச்சனைகளின்போதும் எனக்கு ஆதரவாக இருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லி சாலையில் நாங்கள் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டபோது, காங்கிரஸ் எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் காங்கிரசில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் மல்யுத்த போட்டிகளில் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டோமோ அதேபோல் நாட்டு மக்களுக்கு ஆதரவாக எங்கள் குரல் ஒலிக்கும். குறிப்பாக பெண்களுக்கு ஆதரவாக எங்களின் குரல் பலமாக ஒலிக்கும். டெல்லியில் போராட்டம் நடத்தியபோதே நான் ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறி இருக்கலாம். ஆனால் நான் ஒலிம்பிக்கில் பைனல் வரை வந்து விட்டேன். ஆனால் இப்போது நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது'' என்றார்.
ஹரியானா சட்டப்பேரவைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியாவுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் மீது வினேஷ் போகத் உள்ளிட்ட பல்வேறு மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். பிரிஜ் பூஷனுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நீண்டநாள் போராட்டமும் நடத்தினார்கள். போராட்டம் நடத்திய வினேஷ் போகத் உள்ளிட்ட வீராங்கனைகள் தரதரவென இழுத்து செல்லப்பட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்வளவு நடந்தபிறகும், மத்திய பாஜக அரசு, பிரிஜ் பூஷனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்பிறகு வினேஷ் போகத் காயத்தால் அவதிப்பட்டு குணமடைந்தார். கடும் போராட்டம், அவமானம், காயம் ஆகியவற்றை தாண்டி பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு பதக்க கனவுடன் வந்த வினேஷ் போகத் உடல் எடை அதிகரிப்பு காரணம் காட்டி திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?