ராய்ப்பூர்: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வளர்ந்த மாநிலங்கள், வளரும் மாநிலங்கள் என்ற பாகுபாடின்றி அனைத்து மாநிலங்களிலும் மது என்னும் அரக்கன் ஆட்டிப்படைத்து வருகிறான். தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் தெருவுக்கு தெரு பெட்டிக்கடைகளை போல மதுக்கடைகளும் பல்கி பெருகி கிடப்பதால் மக்கள் மதுவுக்கு அடிமையாகுகின்றனர் என்று உறுதியாகச் செல்லலாம்.
ஆனால் மது குடிப்பது இப்போது ஒரு சமூக கலாசாரமாக மாறி விட்டதுதான் வேதனையான விஷயம். ஆண்களுக்கு நிகராக பெண்களும், சில இடங்களில் தந்தையும், மகனும் சேர்ந்து மது அருந்துவது என மோசமான சமூகத்தில் நாம் சென்று கொண்யிருக்கிறோம். இதில் மிக கொடுமையான விஷயம் பள்ளி மாணவர்கள் மதுவுக்கு அடிமையாவதுதான். சில மாநிலங்களில் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் மதுவின் கோரப்பசிக்கு இரையாகுகின்றனர்.
அந்த வகையில் பள்ளியில் வைத்தே மாணவிகள் மது அருந்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் மஸ்தூரி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சில மாணவிகள் மது அருந்தும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதாவது பீர் பாட்டில்களை கையில் வைத்திருக்கும் 5க்கும் மேற்பட்ட மாணவிகள், அதை ருசித்து குடிப்பதும், ’சைட் டிஸ்’ஆக சோமோஸ் உள்ளிட்ட தின்பண்டங்களை சாப்பிடும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகி உள்ளன.
இந்த வீடியோவை பார்த்த பலரும் மாணவிகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‘’படிக்கும் வயதில் மது அருந்துவதே தவறு. அதுவும் புத்தகங்களை கையில் வைத்து கல்வி கற்கும் இடத்தில், மது பாட்டில்களை கையில் வைத்து கொஞ்சம் கூட பயமின்றி குடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்களின் பெற்றோர்களை அழைத்து கடுமையான கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்’’ என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
மாணவிகள் மது அருந்தும் வீடியோ வைரலாக பரவிய நிலையில், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி பள்ளி நிர்வாகத்துக்கு மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். ‘’மது குடித்த மாணவிகளை பள்ளியில் இருந்து நீக்கினாலோ அல்லது வேறு நடவடிக்கை எடுப்பதோ இந்த பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. மதுவின் தீமைகள் குறித்தும், இதனால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்; எத்தனை குடும்பங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர் என்பதை பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் மனதில் அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்’’ என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.