'மோடியின் உலகத்தில் உண்மையை அகற்றலாம்... ஆனால் நிஜ உலகில்...?'... ராகுல் காந்தி அதிரடி!
மக்களவையில் ராகுல் காந்தி பேசிய சில கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக ராகுல் காந்தியின் இந்து மதம் குறித்த பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
டெல்லி: மக்களவையில் நான் பேசிய அனைத்தும் உண்மை. உண்மையை ஒருபோதும் அகற்ற முடியாது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு பிறகு கடந்த 20ம் தேதி முதல் நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2 நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று மக்களவை கூடிய நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரை தீர்மானம் மீது விவாதம் நடந்தது.
அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி நாடாளுமன்றமே அதிரும் வகையில் பிரதமர் மோடியை, பாஜகவை கடுமையாக தாக்கினார்.
நீட் தேர்வு முறைகேடு குறித்து பேசிய ராகுல் காந்தி, ''நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கானது அல்ல; இது பணக்கார மாணவர்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் கல்வி வியாபாரமாக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.
மேலும் ’அக்னிவீர் திட்டம்’ ராணுவ வீரர்களுக்கான திட்டம் இல்லை. இது மோடியின் திட்டம் என்று சாடினார். இதுதவிர ''மணிப்பூர் மாநிலம் கலவரத்தால் பற்றி எரிய பாஜக அரசே காரணம். பிரதமர் மோடி, அமித்ஷா இதுவரை மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை?'' என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து மக்களவையில் சிவபெருமான் படத்தை எடுத்து காண்பித்த ராகுல் காந்தி, ’’சிவனின் கையில் இருக்கும் திரிசூலம் ஆயுதம் அல்ல; அது அகிம்சையின் சின்னம். ஆனால் பாஜகவில் உள்ள இந்துக்கள் மதத்தை வன்முறையாக மாற்றுகின்றனர்’’ என்று ஆவேசமாக பேசினார்.
அப்போது பிரதமர் மோடி எழுந்து நின்று, 'இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது' என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, ‘’இந்துக்கள் பாஜகவுக்கு மட்டும் சொந்தம் அல்ல; பிரதமர் மோடிக்கு மட்டும் சொந்தம் அல்ல; ஆர்.எஸ்.எஸ்க்கும் இந்து மதம் சொந்தம் இல்லை’’ என்று அதிரடியாக பேசினார்.
ராகுல் காந்தி இந்து மதத்தை அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று மக்களவையில் ராகுல் காந்தி பேசிய சில கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக ராகுல் காந்தியின் இந்து மதம் குறித்த பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மக்களவைக்கு வந்த ராகுல் காந்தியிடம் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, ''நான் பேசியது அனைத்தும் உண்மை. உண்மையை யாராலும் அகற்ற முடியாது. மோடிஜியின் உலகத்தில் இருந்து உண்மையை அகற்றி விடலாம். ஆனால் நிஜ உலகத்தில் உண்மையை ஒருபோதும் அகற்ற முடியாது. அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நான் பேசியதை அகற்றிக் கொள்ளட்டும். ஆனால் உண்மை, உண்மைதான்’’ என்று தெரிவித்தார்.
What's Your Reaction?