யூரோ கோப்பை கால்பந்து சூப்பர் 16 சுற்று… பிரான்ஸ், போர்ச்சுக்கல் காலிறுதிக்கு தகுதி!
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் சூப்பர் 16 போட்டியில் பிரான்ஸ், போர்ச்சுக்கல் அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளன.
அரீனா: 2024ஆம் ஆண்டுக்கான யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து தற்போது சூப்பர் 16 ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய நேரப்படி நேற்றிரவு 9.30 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் – பெல்ஜியம் அணிகள் மோதின. கடந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை சென்று ரன்னர்-அப் ஆன பிரான்ஸ் அணி, பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான எம்பாபேவை (Mbappé) சமாளிப்பதே பெரும் சவாலாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
அதேபோல், பெல்ஜியம் அணியின் லுகாகு (Lukaku) பிரான்ஸ் அணியின் சாம்பியன் கனவை தகர்த்தெறிவாரா என்ற எதிரபார்ப்பும் எழுந்தது. இதனால் ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதின. பிரான்ஸ், பெல்ஜியம் இரு அணியின் தடுப்பாட்ட வீரர்களும் எதிரணியின் கோல் முயற்சிகளை முறியடித்தனர். அதேநேரம் பிரான்ஸ் வீரர்களை விட பெல்ஜியம் அணியினர் கோல் போஸ்ட்டை நோக்கி துல்லியமாக தாக்குதல்கள் நடத்தியதால் போட்டியின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருக்கும் வரையிலும் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் திணறின. ஆனால் கடைசி நேரத்தில் அதிர்ஷ்டம் பிரான்ஸ் பக்கம் கை கூடியது. பெல்ஜியம் வீரர் ஜான் வெர்டோங்கன், பிரான்ஸ் வீரர் கோலோ முவானியின் கிராஸை தடுக்க நினைத்த நேரத்தில், அது சேம் சைட் கோலாக மாறியது. இதனால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப் பெற்றது.
இதனையடுத்து இந்திய நேரப்படி அதிகாலை 12.30 நடந்த மற்றொரு போட்டியில், போர்ச்சுக்கல் அணியை ஸ்லோவேனியா எதிர்கொண்டது. கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்ட ஸ்லோவேனியா தடுப்பாட்ட வீரர்கள் செய்வதறியாது திகைத்தனர். ஆனாலும் போர்ச்சுக்கலின் கோல் முயற்சிகள் அனைத்தையும் ஸ்லோவேனியா தடுப்பாட்ட வீரர்களுடன் இணைந்து கோல் கீப்பர் ஜான் ஒப்லக் அட்டகாசமாக முறியடித்தார். போர்ச்சுக்கலின் சில அற்புதமான ப்ரீ-கிக் ஷாட்களையும் ஸ்லோவேனியா அணி கோலாக அனுமதிக்கவில்லை. ஆட்டத்தின் இறுதி வரையிலும் இரு அணிகளும் கோல் அடிக்காமல் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால், ஆட்டம் டை பிரேக்கர் முறைக்கு சென்றது. இதில், போர்ச்சுக்கல் அணியின் ரொனால்டோ, பெர்னாண்டஸ், கார்வால்ஹோ இ சில்வா மூவரும் கோல் அடித்தனர். ஆனால் ஸ்லோவேனியா அணி ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் பிரான்ஸை தொடர்ந்து போர்ச்சுக்கலும் காலிறுதிக்கு தகுதிப் பெற்றன. முக்கியமாக இந்த இரு அணிகளும் தான் காலிறுதிப் போட்டியில் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, இந்திய நேரப்படி வரும் 5ம் தேதி இரவு 9.30 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதியில் ஸ்பெயின் – ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. 6ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது காலிறுதியில் பிரன்ஸ் – போர்ச்சுக்கல் அணிகள் பலப்பரீட்ச்சை நடத்துகின்றன. 6ம் தேதி இரவு 9.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன.
What's Your Reaction?