இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கெளதம் கம்பீர்?... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஆக்ரோஷத்துக்கு பெயர்போன கெளதம் கம்பீர் அதிகமாக கோபப்பட கூடியவர். எதிலும் அதிரடியாக முடிவெடுக்க கூடியவர் என்பதால் அவருக்கும், இந்திய அணி வீரர்களுக்கும் ஒத்துப்போகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டெல்லி: இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கெளதம் கம்பீர் இந்த வாரம் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்திய இந்திய அணி 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
கபில்தேவ், தோனி வரிசையில் இந்திய அணிக்கு கோப்பையை வென்று பெருமை சேர்த்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த உலகக்கோப்பை தொடருடன் முடிந்து விட்டது. சுமார் இரண்டறை ஆண்டுகாலம் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவி வகித்த டிராவிட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவை பைனல் வரை அழைத்துச் சென்றுள்ளார்.
கடந்த ஆண்டு 50 ஓவர் உலக்கோப்பை இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. இது டிராவிட்டுக்கு பெரும் ஏமாற்றம் அளித்த நிலையில், தற்போது இந்திய வீரர்கள் டி20 உலகக்கோப்பையை வென்று டிராவிட்டை வெற்றியுடன் வழியனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? என்ற கேள்வி கிரிகெட் ரசிகர்களின் மனதில் எழுந்துள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீரின் பெயர் முதலில் அடிபடுகிறது.
இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய கெளதம் கம்பீர், 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4.154 ரன்கள் குவித்துள்ளார். 147 ஒருநாள் போட்டிகளில் 5,238 ரன்கள் குவித்துள்ளார். 37 டி20 போட்டிகளில் 932 ரன்கள் எடுத்துள்ளார்.
2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 97 ரன்கள் விளாசிய கம்பீர் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார். மேலும் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய கம்பீர், 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
மேலும் இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கெளதம் கம்பீர் ஆலோசகராக பணியாற்றிய நிலையில், கொல்கத்தா அணி கோப்பையை தட்டித் தூக்கியது.
இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை கம்பீர் ஆலோசனை செய்தவிதம் அனைவராலும் பாரட்டப்பட்டது. கொல்கத்தா அணியின் ஸ்டார் வீர்ர் சுனில் நைரனை இந்த ஆண்டு தொடக்க வீரராக களமிறக்கி அவரை ஐபிஎல் தொடரின் அதிக ரன்கள் குவித்த வீரராக கெளதம் கம்பீர் மாற்றினார்.
இதுமட்டுமின்றி பாஜக ஆதரவாளரான கம்பீர், அந்த கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகவும் இருந்துள்ளார். இதனால்தான் பிசிசிஐயின் முதல் தேர்வாக கெளதம் கம்பீர் உள்ளார்.
பிசிசிஐ செயளாலர் ஜெய்ஷா, இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்க கம்பீரிடம் பேசி விட்டதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமைதிக்கு பெயர்போன டிராவிட், இந்திய அணியின் சீனியர் வீரர்களை உரிய மரியாதையுடன் வழிநடத்தினார். இதனால் அவருக்கும், இந்திய அணி வீரர்களுக்கும் இடையே எந்த பிரச்சனையும் எழவில்லை.
ஆனால் ஆக்ரோஷத்துக்கு பெயர்போன கெளதம் கம்பீர் அதிகமாக கோபப்பட கூடியவர்.
எதிலும் அதிரடியாக முடிவெடுக்க கூடியவர் என்பதால் அவருக்கும், இந்திய அணி வீரர்களுக்கும் ஒத்துப்போகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?