பாராலிம்பிக்கில் அசத்திய தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து

பாராலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Sep 3, 2024 - 07:12
Sep 4, 2024 - 10:11
 0
பாராலிம்பிக்கில் அசத்திய தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியாவில் இருந்து 84 வீரர்கள், 12 விளையாட்டு பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர். நமது தமிழ்நாட்டை சேர்ந்த 'தங்க நாயகன்' மாரியப்பன் தங்கவேல், துளசிமதி முருகேசன், சிவராஜன் சோலைமலை, மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சுமதி சிவன், கஸ்தூரி ராஜாமணி ஆகியோர் பாராலிம்பிக் தொடரில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பாராலிம்பிக் தொடரில் தமிழ்நாடு வீரர்கள் துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோர் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அதாவது பெண்கள் ஒற்றையர் SU5பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சியா குய் யாங்விடம் 17-21, 10-21 என்ற கணக்கில் தோல்வியை தழுவிய துளசிமதி முருகேசன் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

துளசிமதி முருகேசன் அரையிறுதியில் தமிழ்நாடு வீராங்கனை மனிஷா ராமதாஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்து இருந்தார். பாராலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் துளசிமதி முருகேசன் என்பது குறிப்பிடத்தக்கது. 

அரையிறுதியில் துளசிமதி முருகேசனிடம் தோல்வி அடைந்த மனிஷா ராமதாஸ், மூன்றாவது இடத்திற்கான பேட்மிண்டன் போட்டியில் டென்மார்க் வீராங்கனை கேத்ரின் ரோசன்கிரெனை 21-12, 21-8 என்ற கணக்கில் வீழ்த்திய வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் இருவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், பாராலிம்பிக்ஸில் குறிப்பிடத்தக்க வகையில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்துகள். உங்களின் அர்ப்பணிப்பும், நெகிழ்ச்சியும், தளராத மனப்பான்மையும் லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கிறது. நாங்கள் உங்களைப் பற்றி நம்பமுடியாத அளவிற்குப் பெருமைப்படுகிறோம் என தெரிவித்துள்ளார். 

அதேபோன்று,  மனிஷா ராமதாஸுக்கு கூறிய வாழ்த்து செய்தியில், வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸுக்கு வாழ்த்துகள். உங்கள் மன உறுதி தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது. ஜொலித்துக் கொண்டே இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow