செல்லூர் ராஜூவின் மா.செ பதவிக்கு முட்டி மோதும் சரவணன்.. தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன?

Sellurraju vs Saravanan: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மாவட்டச் செயலாளர் பதவிக்கு டாக்டர் சரவணன் குறிவைத்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவலால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Sep 3, 2024 - 06:55
Sep 4, 2024 - 10:11
 0
செல்லூர் ராஜூவின் மா.செ பதவிக்கு முட்டி மோதும் சரவணன்.. தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன?
செல்லூர் ராஜூவின் மா.செ பதவிக்கு முட்டி மோதும் சரவணன்

அதிமுகவின் மதுரை மாவட்டச் செயலாளராக இருக்கும் செல்லூர் ராஜூ வெளிநாட்டிற்கு சென்று செட்டிலாக உள்ளதாகவும், அதனால் அவரது மா.செ பதவிக்கு சரவணன் காய் நகர்த்தி வருவதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் தான் மதுரை அதிமுக கூடாரத்தின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம். 

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றிருந்தாலும், தருமபுரி, சேலம், கோயம்புதூர், ஈரோடு, திருப்பூர், மதுரை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை அதனால் முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. பாஜக – அதிமுக கூட்டணி அங்கு தங்களுடைய செல்வாக்கை நிரூபித்தது. தருமபுரி, கோயமுத்தூர் தொகுதிகளில் திமுகவை வாஷ் அவுட் செய்தது அதிமுக தலைமையிலான கூட்டணி. ஆனால், திமுகவின் கோட்டையாக கருதப்படும் மதுரையில் சமமான போட்டியை கொடுத்திருந்தது அதிமுக. மதுரையில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி தலா 5 இடங்களை கைப்பற்றின. 

இந்தளவிற்கு டஃப் கொடுத்த அதிமுகாவால் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்பதைவிட, 2 ஆம் இடம் கூட பிடிக்க முடியவில்லை. இதனால் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மீது அதிமுக தலைமை அதிருப்தியில் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. போதாக்குறைக்கு ஏற்கனவே மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, தவளை தன் வாயால் கெடும் என்பதைபோல அவ்வப்போது ஏதாவது ஒன்று சொல்லி தலைமையை டென்ஷனாக்கிக் கொண்டுத்தான் இருந்தார். அதாவது, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை புகழ்ந்தது, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்லது என அதிமுகவிற்கு பாதகமான செயல்களிலேயே அவர் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தார். தெரிந்து செய்கிறாரா? அல்லது தெரியாமல் செய்கிறாரா? என்று சொந்தக் கட்சிக்காரர்களே Confuse ஆகும் அளவிற்கு வெள்ளந்தியான முகபாவனைகளை வைத்தே எல்லா விஷயங்களை கவர் செய்துவிட்டார். 

இந்த நிலையில், அவரையே Pack செய்து அனுப்ப சரவணன் திட்டமிட்டு வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சரவணனை பொறுத்தவரை அவர் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு இருந்தார். இந்த தேர்தலில் அவர் தன்னுடைய சொந்த வருமானத்தையே செலவு செய்ததாகவும், ஆனால் அவரால் வெற்றி பெற முடியாத சூழலால் மதுரையில் இருக்கும் 3 மாவட்டச் செயலாளர்களில் ஒருவரது பதவிக்கு குறி வைக்க தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

மதுரை அதிமுகவை பொறுத்தவரை மாநகர் மாவட்டச் செயலாளராக செலூர் ராஜூ, கிழக்கு மாவட்டச் செயலாளராக ராஜன் செல்லப்பா, மேற்கு மாவட்டச் செயலாளராக ஆர்.பி.உதயகுமார் இருந்து வருகின்றனர். மூன்று முக்கிய தலைகள் மதுரையில் இருந்தும் அதிமுகவால் மொத்த 10 தொகுதிகளையும் கைப்பற்ற முடியவில்லை என்ற ஆதங்கம் தலைமையிடம் இருந்ததாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதனால், மக்களவைத் தேர்தலில் வாக்குகள் குறைந்தது குறித்து மா.செக்கள் மற்றும் வேட்பாளர் சரவணனிடமும் விளக்கம் கேட்கப்பட்டபோது, அப்போது மாநகர் மற்றும் புறநகரின் வாக்குகள் குறைந்ததால் தான் அதிமுக 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டதாக கொளுத்திப்போட்டு உள்ளார். இதனைக் கேட்டு டென்ஷனான தலைமை ராஜன் செல்லப்பா மற்றும் செல்லூர் ராஜூ இருவரிடமும் விளக்கம் கேட்டது. குறிப்பாக புறநகரைவிட மாநகரில் தான் வாக்குகள் அதிகம் குறைந்ததால் செல்லூர் ராஜூமீது தலைமை நம்பிக்கை இழந்ததாகக் கூறப்படுகிறது. 

ராகுல்காந்திக்கு புகழாரம், விஜய்க்கு வரவேற்பு, கட்சி ஒருங்கிணைப்பு என ஏற்கனவே செல்லூர் ராஜூமீது கடுப்பில் இருந்த தலைமைக்கு, மாநகர் தோல்வி என்பது உச்சக்கட்ட டென்ஷனை கொடுத்ததாம். இருந்தாலும், சீனியர் என்ற ஒற்றை காரணத்தின் அடிப்படையிலும், கட்சி தன்னைவிட்டு போக கூடாது என்றால் செல்லூர் ராஜூ போன்ற முக்கியஸ்தவர்களின் ஆதரவும் தேவை என்பதாலும் தலைமை அமைதிக் காத்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. 

இந்த சான்ஸை பயன்படுத்திக் கொள்ள நினைத்த சரவணன், பொறுமையாக காய் நகர்த்தி வந்ததாகவும், செல்லூர் ராஜூவின் மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தால், வேட்பாளராக செலவு செய்ததைவிட கட்சிக்காக அளவுக்கு அதிகமாகவே செலவு செய்யத் தயார் என்று கூறியதாகவும் மதுரை அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. சரவணின் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தலைமை, செல்லூர் ராஜூவிற்கு தலைமைக்குழுவில் பதவிக் கொடுத்து அவரை ஓரங்கட்ட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் கட்சி ரீதியான பதவிகளில் ஒருவர் இரண்டு பதவிகளில் இருக்கக் கூடாது என்பதால், தலைமைக்குழுவிற்கு செல்லூர் ராஜூ நியமிக்கப்பட்டால் அவரது மாவட்டச் செயலாளர் பதவி காலியாகிவிடும் என்பதே சரவணன் திட்டமாக இருக்கிறதாம். 

செல்லூர் ராஜூவை பொறுத்தவரை, வட்டச் செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கி, கவுன்சிலர், எம்.எல்.ஏ, அமைச்சர் என படிப்படியாக உயர்ந்தவர். இவரின் செயலால் இவருக்கு மதுரை மாநகர் செயலாளர் பதவியை கட்சித் தலைமை வழங்கி இருந்தது. என்னத்தான் இவர் தொகுதியில் ஆற்றிய செயலுக்காக மா.செ. பதவி கிடைத்ததாகக் கூறப்பட்டாலும், தனக்கு எதிராக ஒருவரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் செல்லூர் ராஜு தெளிவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. 

ராஜன் செல்லப்பா போன்ற சீனியர்களின் வெறுப்பிற்கு உள்ளான அவர், ஆர்.பி.உதயகுமாருடனும் மல்லுக்கட்டினாலும் 2021 தேர்தலுக்கு பிறகு எல்லாவற்றையும் ஓரங்கட்டி அமைதியான சீனியராக வலம்வந்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தான் அதிமுகவில் ஐக்கியமாகினார் சரவணன். ஆனால் சரவணனை கட்சியில் சேர்க்க செல்லூர் ராஜு ஒத்துக்கொள்ளவில்லை என்று மதுரை வட்டாரத்தில் பேசப்பட்டது. சரவணனோ தனக்கு செல்லூர் ராஜூவின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்து அவரை நேரில் சென்று மரியாதை செய்தார். தற்போது, செல்லூர் ராஜூவிற்கு நிகரான மரியாதையை பெற்றுவருவதோடு, அவருக்கு எதிராகவும் அரசியல் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதனை அறிந்துக் கொண்ட செல்லூர் ராஜூ, தனக்கு வயதாகிவிட்டது... இதற்குமேல் கட்சியில் நமக்கென்ன வேலை என்றும், தனக்கு அரசியல் வாரிசு இல்லை என்பதால் தன் மகளோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடலாம் என்றும் முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், சரவணனுக்கு வேலையும் சுலபமாக மாறும் என்று அரசியல் விமர்சர்கள் தெரிவிக்கின்றனர். 

தற்போது அதிமுகவில் மாநில மருத்துவரணி இணைச் செயலாளராக உள்ள சரவணன், எங்கு சென்றாலும் கொடியை நாட்டக்கூடியவர். இதற்குமுன் அவர் பயணித்த கட்சிகளிலும் தனக்கான ஒரு கொடியை நாட்டிவிட்டுத்தான் வந்திருந்தார். 

அந்தவகையில், மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஸ்கெட்ச் போட்டுள்ள சரவணின் திட்டம் பலிக்குமா?அல்லது சீனியர் என்றால் யார் என்பதை செல்லூர் ராஜூ காட்டுவாரா? என்பதை  பொறுத்திருந்து பார்ப்போம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow