கோஷ்டிக்கே டஃப் கொடுக்கும் கோஷ்டி... ஆதிக்கம் செலுத்தும் செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள்?
Selvaperunthagai vs Alagiri: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்கள் கட்சியின் முக்கிய பதவிகளில் ஆதிக்கம் செலுத்துவதாகக் அரசியல் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி என்று சொன்னாலே கோஷ்டி பூசல் தான் அதன் அடையாளமாக இருக்கும்.. அந்தளவிற்கு காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை காங்கிரஸ் கோஷ்டி பூசல் ஃபேமஸான ஒன்றாக காலம்காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வெடித்துள்ள காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசலால், கட்சித் தலைமையே ஆட்டம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி காங்கிரஸில் கோஷ்டிக்கே டஃப் கொடுக்கும் கோஷ்டி யார்? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நடப்பது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தை பொறுத்தவரை மாநில கட்சிகள் 2026 தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், தேசிய கட்சிகளோ திணறி வருகின்றன என்பதே நிதர்சனம். பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, துணைத்தலைவராக இருந்து தலைவராக உயர்ந்தவர். ஆனால் அவர் இப்போதுதான் பொலிடிக்கல் சைன்ஸ் படிக்கப்போவதாகக் கூறி லண்டன் செல்கிறார். இதனால் உடனடியாக மற்றொரு தலைமையை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு பாஜக தள்ளப்பட்டது. அண்ணாமலையின் தலைமையில் பாஜக தமிழகத்தில் வளர்ச்சி கண்டது என்றே சொல்லவேண்டும், அந்தளவிற்கு எதிர்க்கட்சிகளுக்கு சவால்விடக்கூடிய தலைவராக அண்ணாமலை இருந்தார். இந்த நிலையில் தற்காலிக தலைவர் நியமனம் நடந்துக் கொண்டிருக்கிறது.
ஒருபக்கம் பாஜகவில் தலைவர் இல்லாமல் சிக்கல் உருவாகியுள்ளது என்றால், மறுபக்கம் மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸில் தலைவரால் சிக்கல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றதில் இருந்தே பல அதிருப்திகள் அவர்மீது கட்சிக்குள் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. கூட்டணி கட்சித் தலைவர் என்பதைத்தாண்டி திமுகவுடன் மிக நெருக்கமாக இருந்துவருகிறார் என்றும், அவரது ஆதரவாளர்களின் ஆதிக்கம் கட்சிக்குள் அதிகரித்துவிட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது. திமுகவுடனான செல்வப்பெருந்தகையின் நெருக்கம் குறித்து அவர் தலைவராக நியமிக்கப்பட்டப்போதே தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரான அஜய்குமார் சூசகமாக சொல்லி இருந்தார். அதாவது, ஆளும்கட்சியான திமுகவுடன் மிகுந்த சுமுகமான உறவை பேணிவருபவர் என்றும், சட்டமன்றத்தில் மிகத் தீவிரமாக ஆளும்கட்சியை ஆதரித்து பேசிவருபவர் என்பதால் காங்கிரஸ் தலைவர் மாற்றத்தில் திமுகவிற்கு எந்த சங்கடமும் இருக்காது என்றும் அஜய்குமார் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல், மற்ற முன்னாள் தலைவர்களின் ஆதரவாளர்களும் செல்வப்பெருந்தகையை தலைவராக ஏற்க முரண்டு பிடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதாவது காங்கிரஸில் உள்ள அழகிரி கோஷ்டி, பா.சிதம்பரம் கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி, திருநாவுக்கரசு கோஷ்டி, தவிர தலைமையிடம் டைரெக்ட் டீலிங் வைத்துள்ள ஜோதிமணி உட்பட முக்கிய தலைகளும் செல்வப்பெருந்தகையின் தலைமையை ஏற்றுக்கொள்ள தயாராகவே இல்லை என்று சத்யமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த எதிர்ப்பையெல்லாம் மீறித்தான் செல்வப்பெருந்தகை தலைவராக நீடித்து வருகிறார்.
ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர், சசிகாந்த் உள்ளிட்ட சில தலைகள் மேலிடத்துடன் டைரக்ட் டீலிங் வைத்துள்ளதால், இவர்களின் ஆதரவாளர்களும் கோஷ்டி பூசல் மிகப்பெரிய பங்குகளை ஆற்றிவருவதாகக் கூறப்படுகிறது.
இவர்களையெல்லாம்விட அழகிரி மட்டுமே மீண்டும் தலைவராக ஆசைப்பட்டு வருவதால் செல்வபெருந்தகையுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அழகிரி vs செல்வப்பெருந்தகை மோதல் என்பது மறைமுகமாக தொடர்ந்துக் கொண்டே இருப்பதாகக் கூறப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கக்கன் கல்வெட்டு திறப்பு விழாவில் கூட இவர்களின் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. கக்கனின் கல்வெட்டை அழகிரி திறந்து வைத்தாலும், அந்த கல்வெட்டில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகையின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அழகிரியின் ஆதரவாளர்களோடு செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள் ஈடுப்பட்டனர்.
அதுமட்டுமல்லாமல், அழகிரி தலைவராக இருந்தபோது ராகுல்காந்திக்கு சீக்ரெட் ரிப்போர்ட்டுகளை செல்வப்பெருந்தகை அனுப்பியதாலே அழகிரியின் பதவி பறிக்கப்பட்டதாக அப்போது பேசப்பட்டது. இதனாலேயே, செல்வப்பெருந்தகை தலைவரானது அழகிரி ஆதரவாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அழகிரிக்கு எதிராக செல்வப்பெருந்தகை எடுத்த ஆயுதத்தையே செல்வபெருந்தகைக்கு எதிராக அழகிரி எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்வெளிப்பாடாக, கட்சியில் செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள் யார் யாருக்கு என்னென்ன பதவிகள் வழங்கப்பட்டுள்ளன, அவர்களின் ஆதிக்கம் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் எந்த அளவிற்கு உள்ளது என்ற சீக்ரெட் ரிப்போர்ட்டை அழகிரி ஆதரவாளர்கள் திரட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னாள் காங்கிரஸ் உறுப்பினராக இருந்த விஜயதரணி ஆதரவாளர்களும் உதவி செய்துவருவதாகக் கூறப்படுகிறது.
இரண்டு கோஷ்டிகளின் மோதலால் தலைமை டென்ஷனாகியுள்ளதாகவும், இதனால் விரைவிலேயே தலைவர் மாற்றம் நிகழத்தப்படலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படி அழகிரி vs செல்வப்பெருந்தகை என்று பனிப்போர் நீடித்துக் கொண்டிருக்க, தலைவர் பதவிக்கு சசிகாந்த் செந்தில் சைலண்ட்டாக காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
எது எப்படியோ, செல்வப்பெருந்தகை கோஷ்டிக்கு எதிராக இறங்கியுள்ள அழகிரியின் கோஷ்டி எதிர்பார்த்தது நடக்குமா? அல்லது தலைமையிடம் அழகிரியின் மவுஸ் குறையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
What's Your Reaction?