Euro Cup 2024: யூரோ கோப்பை அரையிறுதி... நெதர்லாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த இங்கிலாந்து அணி!

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், நெதர்லாந்து அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஃபைனலுக்கு சென்றது இங்கிலாந்து அணி.

Jul 11, 2024 - 12:00
 0
Euro Cup 2024: யூரோ கோப்பை அரையிறுதி... நெதர்லாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த இங்கிலாந்து அணி!
Euro 2024 Semi Final Englang Vs Netherlang

டார்ட்மண்ட்: 2024ம் ஆண்டுக்கான யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி, ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுவிட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டி ஜெர்மனியின் டார்ட்மண்ட் நகரில் நடைபெற்றது. இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான இப்போட்டி கால்பந்து ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த யூரோ தொடரின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து கால்பந்து அணியின் ஆட்டம் மெச்சும்படியாக இல்லை என ரசிகர்கள் விமர்சித்து வந்தனார். அதேபோல், முக்கியமான போட்டிகளில் ஜாம்பவான் அணிகளுக்கே அதிர்ச்சிக் கொடுப்பதில் கில்லாடி நெதர்லாந்து அணி. இதனால் யூரோ கோப்பை அரையிறுதி போட்டியில், நெதர்லாந்து எளிதாக வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், ஆட்டம் தொடங்கியதும் நெதர்லாந்து அணியின் ஆட்டம் படு ஆக்ரோஷமாக இருந்தது. அதற்கு பலனாக நெதர்லாந்து அணியின் செவி சிம்மன்ஸ் 7வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனால் நெதர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 

இதனையடுத்து இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து நெதர்லாந்து அணியின் கோல் பகுதியை முற்றுகையிட, அவர்களது முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. நெதர்லாந்து வீரர் டென்சில் செய்த தவறால், இங்கிலாந்துக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. அதனை இங்கிலாந்து வீரர் ஹரி கேன் கோலாக மாற்ற, ஆட்டம் 1-1 என சமநிலைக்கு வந்தது. இதனால் அடுத்த ஒவ்வொரு நொடியிலும் ஆட்டம் பரபரப்பாகச் சென்றது. முக்கியமாக நெதர்லாந்து அணியின் பல கோல் முயற்சிகளை, இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்ட் அட்டகாசமாக தடுத்து நிறுத்தினார். 

ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளுமே தலா ஒரு கோல் மட்டுமே அடித்திருந்ததால், போட்டி சமனில் முடியும் என்றும், அதன் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 90வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் கோல் பால்மர் கொடுத்த பாஸ்ஸை, சப்ஸ்டியூட்டாக வந்த ஆலி வேட்கின்ஸ் கோலாக மாற்றினார். இதனால் நெதர்லாந்து வீரர்களும் அந்நாட்டு ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். அதன்பின்னர் எக்ஸ்ட்ராவாக வழங்கப்பட்ட 5 நிமிடங்களில் நெதர்லாந்து அணி வீரர்களால் பதில் கோல் திருப்ப முடியாமல் போக, 2-1 என்ற கணக்கில் இப்போட்டியை வென்றது இங்கிலாந்து.

கடந்த யூரோ கோப்பை தொடரில் இத்தாலி அணியிடம் பெனால்டி ஷூட் முறையில் தோல்வியை தழுவியது இங்கிலாந்து. தொடர்ந்து இரண்டாவது முறையாக யூரோ கோப்பை ஃபைனலில் அடியெடுத்து வைத்துள்ள இங்கிலாந்து, வரும் 15ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. மூன்று முறை யூரோ சாம்பியன் என்ற கெத்துடன் களமிறங்கும் ஸ்பெயின், இங்கிலாந்து அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே யூரோ கால்பந்து தொடரில் இங்கிலாந்தும், ஸ்பெயின் அணியும் இதுவரை மூன்று முறை மோதியுள்ளன. அதில், இங்கிலாந்து அணி 2 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது, இது மட்டுமே தற்போதைக்கு அந்த அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேபோல், கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில், உருகுவே அணியை 1-0 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கொலம்பியா அணி. இதனையடுத்து வரும் 15ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில், அர்ஜெண்டினா – கொலம்பியா அணிகள் சாம்பியன் கனவுடன் களமிறங்குகின்றன. இப்போட்டி இந்திய நேரப்படி 15ம் தேதி திங்கட் கிழமை காலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow