தொடக்க வீரர்கள் சொதப்பல்.. வருண் சக்கரவர்த்தியின் 5 விக்கெட்டுகள் வீண்
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதனிடையே 2ஆவது போட்டி, நேற்று ஞாயிற்றுக்கிழமை போர்ட் எலிசபெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்க பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. கடந்த போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன் இதில் டக் அவுட் ஆனார். கடந்த சில போட்டிகளில் சொதப்பி வரும் அபிஷேக் சர்மா 4 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 4 ரன்களில் வெளியேற 45 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர், திலக் வர்மா (20 ரன்கள்), அக்ஷர் படேல் (27 ரன்கள்) சிறிது நேரம் தாக்குப் பிடித்தனர். கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 45 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். கட்டுக்கோப்பாக பந்துவீசிய தென் ஆப்பிரிக்கா அணியில் 5 பந்துவீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதனையடுத்து 125 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில், ரியான் ரிக்கெல்டன் (13), எய்டன் மார்க்ரம் (3), ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் (24), மார்கோ ஜான்சன் (7), ஹென்ரிச் கிளாசன் (2), டேவிட் மில்லர் (0) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது.
இதில், ரிக்கெல்டன் தவிர்த்த 5 விக்கெட்டுகளையும் வருண் சக்கரவர்த்தியே வீழ்த்தினார். ஆனாலும், நிலைத்து நின்று ஆடிய ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 47 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு உறுதுணையாக, ஜெரால்ட் கோட்ஸே 9 பந்துகளில் 19 ரன்கள் குவித்தார்.
இதனால், 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம், 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று இரு அணிகளும் சமனில் இருக்கின்றன. 3ஆவது டி20 போட்டி செஞ்சூரியனில் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
What's Your Reaction?