விளையாட்டு

Ind VS Ban: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்... வெற்றியின் விளிம்பில் இந்திய அணி!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

Ind VS Ban: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்... வெற்றியின் விளிம்பில் இந்திய அணி!
இந்தியா - வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் - 3வது நாள் அப்டேட்

சென்னை: இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஒருகட்டத்தில் 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வினும் ரவீந்திரே ஜடேஜாவும் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் எடுத்தனர். 

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 376 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி சார்பில் ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளையும், டஸ்கின் அஹமத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி, 47.1 ஓவர்கள் விளையாடி 149 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, இரண்டாவது நாள் முடிவில் 308 ரன்கள் முன்னிலை பெற்றது. 

இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடர்ந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் அதிரடி காட்டினர். முக்கியமாக சுப்மான் கில் நிதானமாக ஆட, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆக்ரோஷமாக ஆடினார். சுப்மான் கில் 176 பந்துகளில் 119 ரன்களும், ரிஷப் பந்த் 128 பந்துகளில் 109 ரன்களும் எடுத்தனர். கார் விபத்திற்குப் பின் 637 நாட்கள் கழித்து களமிறங்கிய ரிஷப் பந்த், டெஸ்ட் போட்டிகளில் 6 சதம் அடித்து தோனியின் சாதனையை சமன் செய்தார். தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 514 ரன்களில் போட்டியை டிக்ளேர் செய்தார். அதன்படி இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 287 ரன்கள் எடுத்தது. 

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஷகிர் ஹசன், ஷத்மன் இஸ்லாம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷகிர் ஹசன் 47 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா பந்தில் அவுட் ஆனார். அதேபோல், ஷத்மன் இஸ்லாமும் 68 பந்துகளில் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்றாவது ஆட்டக்காரராக களமிறங்கிய வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 60 பந்துகளில் 51 ரன்களுடனும், அவருடன் ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே போதிய வெளிச்சம் இல்லாததால் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நாளை தொடங்கும் நான்காவது நாள் ஆட்டத்தில், 357 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கவுள்ளது வங்கதேச அணி. இதனால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.