Avani Lekara wins Gold in Air Rifle at Paralympics 2024 : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கி கடந்த 11ம் தேதி நிறைவடைந்தது.மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்றனர். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி பாரீஸில் நேற்று முன்தினம் கோலாகலமாகத் தொடங்கியது.
பாராலிம்பிக் தொடரில் 4,400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 22 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் இருந்து 84 வீரர்கள், 12 விளையாட்டு பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர். நமது தமிழ்நாட்டை சேர்ந்த 'தங்க நாயகன்' மாரியப்பன் தங்கவேல், துளசிமதி முருகேசன், சிவராஜன் சோலைமலை, மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சுமதி சிவன், கஸ்தூரி ராஜாமணி ஆகியோர் பாராலிம்பிக் தொடரில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பாராலிம்பிக் தொடரில் இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்துள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியா வீராங்கனை அவானி லெகாரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். அதாவது 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் 249.7 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்த அவானி லெகாரா தங்கப் பதக்கத்தை வென்றார்.
இந்த போட்டியில் பங்கேற்று 246.8 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்த தென் கொரிய வீராங்கனை லீ வெள்ளி பதக்கம் வென்றார். இதே போட்டியில் பங்கேற்று 228.7 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த இந்திய வீராங்கனை மோனோ அகர்வால் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஒரே போட்டியில் இரண்டு பதக்கம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. மேலும் பாராலிம்பிக்கில் இந்தியா அடுத்தடுத்து இரண்டு பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
ஏற்கெனவே டோக்கியோ பாராலிம்பிக்ஸ் தொடரிலும் அவானி லெகாரா தங்கம் வென்றிருந்தார். இப்போது 2வது முறையாக தங்கப் பதக்கம் வென்ற நிலையில், பாராலிம்பிக்கில் 2 தங்கப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 22 வயதான அவானி லெகாரா ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர்.
கடந்த 2012ம் ஆண்டு அதாவது தனது 11வது வயதில் கார் விபத்தில் சிக்கிய அவானி லெகாரா, சக்கர நாற்காலியில் அமரும் நிலைக்கு தள்ளப்பட்டார். சிறு வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் நாட்டுக்காக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவை ரோல் மாடலாக ஏற்றுக் கொண்ட அவானி லெகாரா, அவரைப் போலவே துப்பாக்கி சுடும் போட்டியில் சாதித்து தங்கப் பதக்கம் வெல்ல வென்றும் என்ற லட்சியத்தை மனதில் ஏற்றிக் கொண்டார்.
இந்த லட்சியமே அவரை வீல் சேரில் இருந்து எழ வைத்து இப்போது இந்தியாவுக்கு தங்கம் வெல்ல காரணமாக அமைந்து விட்டது. பாராலிம்பிக்கில் மிகப்பெரும் சாதனை படைத்த அவானி லெகாராவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.