சேப்பாக்கத்தில் சாதித்த 'சிங்கப்பெண்கள்'... தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

தனது டிரேட் மார்க் ஷாட்கள் மூலம் பெளண்டரிகளாக விளாசித்தள்ளிய ஸ்மிருதி மந்தனா அதிரடி சதம் (161 பந்தில் 149 ரன்) விளாசினார். மறுபக்கம் சிக்ஸர் மழை பொழிந்த 20 வயதான ஷஃபாலி வர்மா, 197 பந்தில் 205 ரன்கள் எடுத்தார். இதில் 23 பெளண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும்.

Jul 2, 2024 - 15:02
Jul 2, 2024 - 16:56
 0
சேப்பாக்கத்தில் சாதித்த 'சிங்கப்பெண்கள்'... தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
இந்திய மகளிர் அணி

சென்னை: தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய மகளிர் அணியும், தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியும் ஒரே ஒரு  டெஸ்ட் போட்டியில் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.

மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 600 ரன்களை கடப்பது இதுவே முதன்முறையாகும். தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. 

தனது டிரேட் மார்க் ஷாட்கள் மூலம் பெளண்டரிகளாக விளாசித்தள்ளிய ஸ்மிருதி மந்தனா அதிரடி சதம்  (161 பந்தில் 149 ரன்) விளாசினார். மறுபக்கம் சிக்ஸர் மழை பொழிந்த 20 வயதான ஷஃபாலி வர்மா, 197 பந்தில் 205 ரன்கள் எடுத்தார். இதில் 23 பெளண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும். 

இந்திய அணி முதல் இன்னிங்சில் 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 266 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. எதிரணி வீராங்கனைகளை சுழல் வலையில் வீழ்த்திய இந்திய வீராங்கனை சினே ராணா 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

337 ரன்கள் பின்தங்கி 'ஃபாலோ ஆன்' ஆன நிலையில் 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 373 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் சுனே லூஸ் சதம் (109 ரன்) விளாசினார். இந்தியா தரப்பில் சினே ராணா, தீப்தி ஷர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

பின்பு 37 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி எட்டியது. இதன்மூலம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்றது. மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய சினே ராணா ஆட்ட நாயகி விருதை வென்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow