பார்படாஸை தாக்கிய சூறாவளி... ஹோட்டலில் முடங்கிய இந்திய வீரர்கள்... நாடு திரும்புவது எப்போது?

பார்படாஸில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதாவும், பலத்த காற்று காரணமாக மின்விநியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. கடைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Jul 2, 2024 - 08:46
Jul 2, 2024 - 11:29
 0
பார்படாஸை தாக்கிய சூறாவளி... ஹோட்டலில் முடங்கிய இந்திய வீரர்கள்... நாடு திரும்புவது எப்போது?
Indian Cricket Players Stuck in Hurricane Beryl

பார்படாஸ்: பார்படாஸை சூறாவளி தாக்கியதால் ஹோட்டலில் முடங்கிய இந்திய வீரர்களை சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்து வர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டு இருந்தது. 

இந்திய அணி வீரர்கள் பார்படாஸில் இருந்து புறப்பட்டு நேற்று நள்ளிரவு மும்பை விமான நிலையத்துக்கு வருகை தர இருந்தனர். ஆனால் திடீரென சூறாவளி தாக்கியதால் பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டது. 

அங்கு இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்திய வீரர்களால் திட்டமிட்டபடி நாடு திரும்ப முடியவில்லை. பார்படாஸில் பலத்த காற்றுடன், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்திய அணி வீரர்கள் கடந்த 2 நாட்களாக ஹோட்டலில் முடங்கியுள்ளனர்.

பார்படாஸில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதாவும், பலத்த காற்று காரணமாக மின்விநியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. கடைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக பேசிய பார்படாஸ் பிரதமர் மியா மோட்லி, ''நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் பலர் நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். நிலைமை சீரான பிறகு அடுத்த 12 மணி நேரத்துக்குள் விமான நிலையம் திறக்கப்படும்'' என்றார்.

இந்நிலையில், ஹோட்டலில் முடங்கிய இந்திய வீரர்களை சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வர பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிசிசிஐ சார்பில் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விமானம் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு பார்படாஸில் இருந்து புறப்பட்டு மாலை 7.45 மணிக்கு டெல்லி வந்தடையும் என தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இது தொடர்பாக பிசிசிஐ சார்பில் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்பியதும் மிகப்பெரிய பாராட்டு விழா நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow