டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் 'GOAT' தான்.. ஆனாலும்.. சவுரவ் கங்குலி சொல்வது என்ன?
ரிஷப் பண்ட் குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகளில் [ஒருநாள் மற்றும் டி20] சிறந்து விளங்க வேண்டியது அவசியம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
டெல்லி: வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. 2வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து முதல் டி20 போட்டி அக்டோபர் 7ம் தேதியும், 2வது டி20 போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 3வது டி20 போட்டி அக்டோபர் 13ம் தேதியும் நடைபெற உள்ளன. இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கவுதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் படுதோல்வி அடைந்தது. ஆனால் வங்கதேச தொடரில் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.
மேலும் படிக்க: ஆஃப்கானிஸ்தானின் யுவராஜ் சிங் - முஹமது கைஃப்: அஸ்வின் கூறும் அந்த வீரர்கள் யார்?
உலகின் நம்பர் 1 பவுலர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் என 4 ஸ்பின்னர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். தொடக்க ஜோடியாக, ரோஹித் சர்மாவுடன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறக்கப்பட உள்ளார்.
முக்கியமாக விபத்தால் காயமடைந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப உள்ளார். 634 நாட்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2024 தொடரிலும், டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்று சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி, ரிஷப் பண்ட் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.
இது குறித்து கங்குலி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக ரிஷப் பண்டை நான் கருதுகிறேன். அவர் அணிக்கு திரும்பியதில் எனக்கு ஆச்சரியம் இல்லை, மேலும் அவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடுவார் என்பதும் தெரியும்.
இப்படியே தொடர்ந்து செயல்பட்டால் அவர், டெஸ்டில் ஆல் டைம் கிரேட் என்பதில் சந்தேகம் கிடையாது. என்னைப் பொறுத்தவரை, அவர் குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகளில் [ஒருநாள் மற்றும் டி20] சிறந்து விளங்க வேண்டியது அவசியம். அவருக்கு இருக்கும் திறமைக்கு, காலப்போக்கில், சிறந்த வீரர்களில் ஒருவராக மாறுவார் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: இங்கிலாந்துக்கே ‘பேஸ்பால்’ கிரிக்கெட்டை காண்பித்த நிசங்கா.. திருப்பி அடித்த இலங்கை..
மேலும், “காயம் காரணமாக முகமது ஷமி அணியில் இடம்பெறவில்லை என்பது எனக்கு தெரியும், ஆனால் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதால் அவர் விரைவில் அணிக்கு திரும்பி வருவார். இந்திய அணியில் நிறைய சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அஷ்வின், ஜடேஜா, அக்ஷர் மற்றும் குல்தீப் ஆகியோர் தற்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். அவர்களை சமாளிப்பது என்பது எளிதான காரியம் அல்ல” என்றார்.
பிசிசிஐ அறிவித்த 16 பேர் கொண்ட அணி வீரர்கள் பின்வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யஷ் தயாள்.
What's Your Reaction?