இங்கிலாந்துக்கே ‘பேஸ்பால்’ கிரிக்கெட்டை காண்பித்த நிசங்கா.. திருப்பி அடித்த இலங்கை
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மான்செஸ்டரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. லார்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் 190 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதோடு தொடரையும் கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில், 3ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 6ஆம் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் புகுந்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில், 325 ரன்கள் எடுத்தது. வழக்கம்போல், பேஸ்பால் கிரிக்கெட் விளையாடிய ஓலீ போப் 156 பந்துகளில் 154 ரன்கள் எடுத்தார்.
மேலும் படிக்க: ஆஃப்கானிஸ்தானின் யுவராஜ் சிங் - முஹமது கைஃப்: அஸ்வின் கூறும் அந்த வீரர்கள் யார்?
அவருக்கு அடுத்தப்படியாக பென் டக்கெட் (86) தவிர மற்ற வீரர்கள் யாரும் 20 ரன்களை தொடவில்லை. இலங்கை அணி தரப்பில், மிலன் ரத்னநாயகே 3 விக்கெட்டுகளையும், விஷ்வா ஃபெர்னாண்டோ, தனஞ்செய டி சில்வா, லஹிரு குமரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 263 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கேப்டன் தனஞ்செய டி சில்வா அதிகப்பட்சமாக 69 ரன்கள் எடுத்தார். பதும் நிசங்கா மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா 64 ரன்களை எடுத்தனர். அவர்களை தவிர அஷிதா ஃபெர்னாண்டோ (11) இரட்டை இலக்கத்தை தொட்டார். மற்ற எந்த வீரரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 62 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு சுருண்டது. பேஸ்பால் கிரிக்கெட்டை விளையாட நினைத்து, இங்கிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். அதிகப்பட்சமாக ஜேமி ஸ்மித் 67 ரன்களும், டான் லாரன்ஸ் 35 ரன்களும், ஜோ ரூட் 12 ரன்களும், ஒலி ஸ்டோன் 10 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டுகளையும், விஷ்வா ஃபெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனால், இலங்கை அணி 219 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பிரண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது முதல், பேஸ்பால் கிரிக்கெட்டை டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி. இந்நிலையில், அந்த அணிக்கு எதிராகவே, இலங்கை அணி அதிரடியாக விளையாடி டெஸ்ட் போட்டியை வென்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
திமுத் கருணரத்னே 8 ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா இங்கிலாந்து பந்துவீச்சை நொறுக்கித் தள்ளினார். இதனால், 107 பந்துகளில் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதற்கிடையில், குசல் மெண்டிஸ் 39 ரன்களில் வெளியேறினார்.
இதனையடுத்து 40.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால், இங்கிலாந்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, தொடரை முழுவதிலும் இழப்பதில் இருந்து, இலங்கை அணி தப்பித்தது.
கடைசிவரை களத்தில் இருந்து பதும் நிசங்கா 124 பந்துகளில் 127 ரன்கள் எடுத்தார். ஆஞ்சலோ மேத்யூஸ் 32 ரன்கள் எடுத்தார். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இலங்கை அணி இழந்தாலும், இந்திய வெற்றியானது இலங்கை அணிக்கு புது உத்வேகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
What's Your Reaction?