காலை உணவைத் தவிர்ப்பதை நம்மில் பலர் வாடிக்கையாக வைத்திருக்கிறோம். உணவுக்கு மாற்றாக டீ, காபி மற்றும் சிற்றுண்டிகளை உண்ணும் பழக்கம் இருக்கிறது. காலை ஒரு வேளை உணவைத் தவிர்ப்பதால் என்னவாகி விடப்போகிறது என்றே நாம் அனைவரும் நினைக்கிறோம். அப்படியல்ல், ஒரு வேளை உணவைத் தவிர்த்தாலும் அது பிரச்னைதான்... குறிப்பாக காலை உணவை நாம் தவிர்க்கவே கூடாது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் எம்.ராதா இது குறித்து விரிவாகக் கூறுகிறார்...
“மூன்று வேளையும் தவறாது உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். பசியோடு இருக்கவே கூடாது. குறிப்பாக காலை உணவுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால், இரைப்பையில் அமிலம் சுரக்கும் தன்மை அதிகாலை நேரத்தில் அதிகமாக இருக்கும். நாம் சாப்பிடும் உணவு அந்த அமிலத்தை நீர்த்துப் போகச் செய்து விடும். ஆனால் நாம் சாப்பிடவில்லையென்றால் அந்த அமிலம் இரைப்பையின் சுவர்களில் பட்டு அரிக்க ஆரம்பித்து விடும். இதனால் இரைப்பையில் புண்கள் ஏற்பட்டு விடும்.
அப்புண்கள் நாளடைவில் அல்சராக மாறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. அதன் பிறகு நாம் உட்கொள்ளும் உணவு அந்தப் புண்களின் மீது படும்போதெல்லாம் வலியும் வாந்தியும் ஏற்படும். இதனால் தேவையான அளவு உணவை உட்கொள்ள முடியாமல் போகும். இதன் காரணமாக அல்சர் மேலும் அதிகமாகும். அதன் விளைவாக உடல் எடை குறைய ஆரம்பிக்கும். நாள்பட்ட அல்சர் உள்ளவர்களுக்கு நெஞ்செரிச்சலும், உணவு விழுங்குவதில் சிரமமும் ஏற்படும்.
நீரிழிவு, இதய நோய் போன்ற நாள்பட்ட வியாதிகளுக்கு ஆளானவர்கள் சரியான நேரத்துக்கு சாப்பிடுவது மிக மிக முக்கியம். சரியான நேரத்தில் தேவையான உணவை எடுத்துக் கொள்ளும்போது ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நாம் உட்கொள்ளும் உணவு 4 முதல் 6 மணி நேரத்தில் செரித்து இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்குச் சென்று விடும். அதன் பின்னர் இரைப்பை காலியாகி விடும். ஆகவேதான் நாளொன்றுக்கு மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
சரியான நேரத்தில் சாப்பாடுதான் சாப்பிட வேண்டும் என்றில்லை பிஸ்கட் போன்ற தின்பண்டங்களையும் சாப்பிடலாம். பசியைப் போக்குமளவுக்கு அதன் அளவு இருக்க வேண்டியது மிக அவசியம். குறிப்பாக காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. ஏனென்றால் காலையில் சாப்பிடும் உணவு மூளைக்குத் தேவையான க்ளுகோஸைக் கொடுத்து அன்றைய நாளுக்கான சுறுசுறுப்பை அளிக்கிறது. என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது மட்டுமல்ல சரியான நேரத்தில் மூன்று வேளைகளும் சாப்பிட வேண்டும் என்பது மிக முக்கியம். காலை ஒரு வேளை சாப்பிடாமல் விட்டால் என்னவாகி விடும் என்கிற அலட்சியப் போக்கு நிச்சயம் பெரிய பிரச்னைகளுக்கு இட்டுச் செல்லும் என்கிற உண்மையை நாம் அனைவரும் உணர வேண்டும்.” என்கிறார் ராதா.