ரூ.2000 கோடி டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம்.. ஸ்டாலின் கையெழுத்து - மதுரைக்கு ஜாக்பாட்

டிரில்லியன்ட் நிறுவனம் ரூ.2000 கோடி மதிப்பில் தனது உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதாகியுள்ளது. நைக் நிறுவனத்துடன் காலணி உற்பத்தியை விரிவுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Sep 5, 2024 - 10:28
Sep 5, 2024 - 17:35
 0
ரூ.2000 கோடி டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம்.. ஸ்டாலின் கையெழுத்து - மதுரைக்கு ஜாக்பாட்
mk stalin rs 2000 crore mou with trilliant

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில், அதிக முதலீடுகளை ஈர்க்கும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்துள்ளதோடு, 2030ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின்,கடந்த 29.8.2024 அன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

கடந்த  31.8.2024 அன்று ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, நேற்று அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனங்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில், ஈட்டன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில், அஷ்யூரண்ட் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, அஷ்யூரண்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

சிகாகோவில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனங்களுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், சிகாகோவில் மற்றுமொரு பயனுள்ள நாள்! சென்னையில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில், ஈட்டன் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் பொறியியல் மைய விரிவாக்கத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டேன். மேலும், இந்தியாவில் அஷ்யூரன்ட் நிறுவனத்தின் முதல் உலகளாவிய திறன் மையம், விரைவில் சென்னையில் அமையவுள்ளதையும் உறுதிசெய்தேன் என்று கூறியுள்ளார்.

இன்றைய தினம் டிரில்லியன்ட் நிறுவனம் ரூ.2000 கோடி மதிப்பில் தனது உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதாகியுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், சிகாகோவில் அற்புதமான முன்னேற்றங்கள்!

டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அலகு மற்றும் அதன் வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆதரவு மையத்தை தமிழ்நாட்டில் நிறுவியது. இந்த மதிப்புமிக்க கூட்டாண்மைக்கு ட்ரில்லியன்ட்டுக்கு நன்றி!

Nike நிறுவனத்துடன் அதன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது மற்றும் சென்னையில் ஒரு தயாரிப்பு உருவாக்கம்/வடிவமைப்பு மையத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுக்களை நடத்தியது.ஏற்கனவே தமிழ்நாட்டில் 5,000 பேர் வேலை செய்து வரும் Optum உடன் ஈடுபட்டுள்ளது மற்றும் சுகாதாரத் துறைக்கான திறமைக் குழாய்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. திருச்சி மற்றும் மதுரையில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். வேகம் வலிமையானது என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow