Broker Arrest : துபாயில் கலை நிகழ்ச்சி.. டிவி நடிகைகளை பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்.. குண்டர் சட்டத்தில் கைது

Dubai Prostitution Broker Arrest in Trivanathapuram : சின்னத்திரை நடிகைகள் உட்பட பல பெண்களை ஏமாற்றிய தரகர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட தரகர்களின் கூட்டாளிகள் 7 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Aug 3, 2024 - 06:00
Aug 3, 2024 - 12:13
 0
Broker Arrest : துபாயில் கலை நிகழ்ச்சி.. டிவி நடிகைகளை பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்.. குண்டர் சட்டத்தில் கைது
Dubai Prostitution Broker Arrest in Trivanathapuram

Dubai Prostitution Broker Arrest in Trivanathapuram : வெளிநாட்டில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் நடன கலைஞர்கள் வேலைக்காக அனுப்புவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்தில் முக்கிய தரகரை சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சின்னத்திரை நடிகைகள் உட்பட பல பெண்களை ஏமாற்றிய தரகர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட தரகர்களின் கூட்டாளிகள் 7 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துபாயில் நட்சத்திர ஓட்டலில் நடன கலைஞர் வேலைக்காக சென்ற கேரளாவை சேர்ந்த பெண் அங்குள்ள தரகர்களால் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அங்கு உள்ள ஓட்டல் ஊழியர்களின் உதவியின் மூலமாக இந்திய தூதரகத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார். அவ்வாறு தொடர்பு கொண்ட கேரள பெண் துபாயிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையைச் சேர்ந்த மூன்று தரகர்கள் பல பெண்களை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

இந்த வகையில் கடந்த மே 30ஆம் தேதி கேரளா பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் பிரகாஷ்ராஜ், ஜெயக்குமார், ஆஃபியா என்ற மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தரகர்களை சென்னை விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். குறிப்பாக இவர்களிடம் விசாரணை நடத்தியதில் வெளிநாட்டில் நட்சத்திர ஓட்டலில் நடன கலைஞர்களுக்கான வேலை என  விளம்பரப்படுத்தி பல பெண்களை மோசடி செய்து, அதற்கு முன்பணமாக ஒரு லட்சத்திலிருந்து 2 லட்ச ரூபாய் வரை பெண்களுக்கு கொடுத்து பத்திரம் ஒன்றில் கையெழுத்தும் வாங்கியுள்ளனர்.

வெளிநாட்டில் வேலை என்று மட்டுமல்லாது கலை நிகழ்ச்சிகள் நடத்துவதாக கூறியும் கைது செய்யப்பட்ட தரகர்களில் ஒருவரும், குறும்பட இயக்குனருமான  பிரகாஷ் ராஜ் சமூக வலைதளங்கள் மூலமாக விளம்பரம் செய்து பல பெண்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. பெண்களிடம் கலை நிகழ்ச்சி என ஒப்பந்தம் பெற்றுக்கொண்டு துபாயில் நட்சத்திர ஓட்டலில் பாலியல் தொழில் நடத்தும் முக்கிய தரகரான ஷகீலை சந்திக்க வைத்தது தெரியவந்துள்ளது

இவர்களை நம்பி பெண்கள் மும்பை வழியாக துபாய்க்கு வேலைக்காக சென்றுள்ளனர். தரகர் ஷகீலின் தோழிகள் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் வற்புறுத்தி ஈடுபட வைத்ததாக தெரியவந்துள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டதால் மூன்று மாதத்தில் தாங்கள் சொன்னபடி கேட்டு , பணத்தை சம்பாதிக்கலாம் எனவும், இல்லை என்றால் பல ஆண்டு காலம் நட்சத்திர ஓட்டலில் இது போன்ற வேலை செய்ய வேண்டி இருக்கும் என மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற சின்னத்திரை நடிகைகள், ஒரு சில படங்களில் நடித்து வெற்றி பெறாத நடிகைகள் என பல பெண்களை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. சுமார் 20 பெண்கள் இது போன்று பாதிக்கப்பட்டுள்ளதாக தப்பித்து வந்த கேரள பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் முக்கிய தரகர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளை பிடிப்பதற்கு சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்களின் தகவல்களை பெற்று  விசாரணை மேற்கொண்டதில் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதை கண்டுபிடித்தனர். ஷகில் உள்ளிட்ட ஏழு பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் முக்கிய தரகரான ஷகில் கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்தபோது லுக் அவுட் நோட்டீஸ் காரணமாக அங்கிருக்கும் குடியுரிமை அதிகாரிகள் ஷகிலை கைது செய்துள்ளனர். கைது செய்த ஷகிலை சென்னை விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஷகிலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையில் இருந்து பல பெண்களை நேர்காணல் என்ற பெயரில் ஏமாற்றி துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதில் முக்கிய தரகராக செயல்பட்டது தொடர்பாக போலீசார் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.மேலும் அங்கு நண்பர்களோடு க்ளப் நடத்தியதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பல பெண்களை ஏமாற்றிய காரணத்தினால் ஷகீல் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து தரகரான ஷகிலின் கூட்டாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டு துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் இருக்கும் பெண்களை மீட்பதற்கான நடவடிக்கையிலும் சென்னை காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் இது போன்ற விளம்பரங்களை நம்பி பெண்கள் ஏமாற வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow