Senthil Balaji Case : மன உளைச்சலில் செந்தில் பாலாஜி.. வீட்டுக்கு போக முடியாத ஏக்கம்.. ஜாமின் கிடைப்பது எப்போது?

Senthil Balaji Case Update : முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்டு குற்றச்சாட்டு பதிவை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Aug 3, 2024 - 05:30
Aug 3, 2024 - 12:08
 0
Senthil Balaji Case : மன உளைச்சலில் செந்தில் பாலாஜி.. வீட்டுக்கு போக முடியாத ஏக்கம்.. ஜாமின் கிடைப்பது எப்போது?
Senthil Balaji Case Update

Senthil Balaji Case Update : ஜாமின் கிடைக்காத மன உளைச்சலில் இருக்கிறார் செந்தில் பாலாஜி. கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் தவித்து வரும் நிலையில் உடல் நல பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 52வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுக்காக இன்றைய தினம் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

மனுவானது நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து  சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.வாக உள்ளதால் இந்த மனுவை எண்ணிடுவதற்காக தலைமை நீதிபதி முன்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் எண்ணிடப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் அதுவரை குற்றச்சாட்டுப்பதிவை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். 

எத்தனை முறை வாய்ப்பளிப்பது என கேள்வி எழுப்பிய  நீதிபதி, மனு இன்னும் எண்ணிடப்படாத நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கருதி  குற்றச்சாட்டுப் பதிவை எப்படி தள்ளிவைக்க முடியும் என கேள்வி எழுப்பினார். 

இதனையடுத்து,  புதிய மனு குறித்து வாதிட அனுமதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு நீதிபதி அனுமதி அளித்த நிலையில் அது தொடர்பான வாதங்கள் செந்தில் பாலாஜி சார்பில் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, செந்தில் பாலாஜி மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.அல்லி குற்றச்சாட்டுப் பதிவை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

இதனிடையே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 7ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும்  தள்ளுபடி செய்துள்ளன. தற்போது செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை  முதனமை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜி படுக்கையில் படுத்திருந்தவாறு இருந்தார். 

இதை பார்த்த நீதிபதி, செந்தில் பாலாஜிக்கு  என்ன ஆனது ? என  கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த காவலர், செந்தில் பாலாஜிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளதால் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறினார். 

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 7ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 52வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow