அரசியலில் கடைசி அத்தியாயத்தில் ராஜகண்ணப்பன்...திணறடிக்கும் டிஜிட்டல் உலகம்

தமிழக அரசியலில் மிக நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் ராஜகண்ணப்பன், 1991ல் அதிமுக ஆட்சியை பிடித்த போது நெடுஞ்சாலை, பொதுப்பணி, மின்சாரம் என மூன்று முக்கிய துறைகளை ஜெயலலிதா அவருக்கு வழங்கியது அன்றைய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. அதிமுக மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கி செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்தவர். பின் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அதிமுகவிலிருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியது பின் 2004 திமுக வுடன் அக்கட்சியை இணைத்தது என அவரது அரசியல் பயணம் நிலையில்லாமல் தடம் மாறி கொண்டே இருந்தது.

Jul 2, 2024 - 17:36
Jul 2, 2024 - 17:43
 0
அரசியலில் கடைசி அத்தியாயத்தில் ராஜகண்ணப்பன்...திணறடிக்கும் டிஜிட்டல் உலகம்
DMK MInister Rajakannappan

2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் இளையான்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கண்ணப்பனுக்கு, அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ட்விஸ்ட் வைத்தார். அதே சமூகத்தை சார்ந்த திருப்பத்தூர் எம்.எல்.ஏ பெரியகருப்பனுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கி கண்ணப்பனை ஓரம்கட்டினார். இதனால் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு ப.சிதம்பரத்திடம் தோல்வி அடைந்தார். ஆனாலும் இன்றுவரை இந்திய அரசியலில் மிக முக்கியமான நிகழ்வாக அந்த தேர்தல் முடிவு பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 2004ஆம் ஆண்டும் சோனியாகாந்தியை பிரமராக்க கூடாது என சர்ச்சை எழுந்த நிலையில் 3 பேரின் பெயர்கள் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில் பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் ஆகியோருடன் ப.சிதம்பரம் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது. அவ்வளவும் செல்வாக்கு மிக்க நபரை ராஜகண்ணப்பன் தேர்தலில் விரலை விட்டு ஆட்டியது பெரும் விவாதப்பொருளானது. 

2011ல் மீண்டும் அதிமுக சார்பில் திருப்பத்தூரில் போட்டியிட்டு அமைச்சர் பெரியகருப்பனிடம் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஒரு வேளை வெற்றி பெற்றிருந்தால் கோகுல இந்திராவுக்கு பதில் அமைச்சரவை பட்டியலில் ராஜகண்ணப்பன் இடம்பெற்றிருந்திருப்பார். பின் ஜெயலலிதா மறைவுக்கு பின் திமுகவில் ஐக்கியமாகி 2021ல் முதுகுளத்தூரில் வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம்பெற்றார். மூத்த உறுப்பினர்களான ஐ.பெரியசாமி, நேரு உள்ளிட்டோருக்கும் வழங்கப்படாத முக்கிய துறையான போக்குவரத்துத்துறை வழங்கிய மு.க.ஸ்டாலின்  ராஜகண்ணப்பனின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தினார்.

சொதப்பல்:

டிஜிட்டல் மயம், ஸ்மார்ட் போன்கள் அனைவரிடமும் உள்ள தற்காலத்தில் செய்தி நிறுவனங்களுக்கு முன்பே இணையவாசிகள் செய்திகளை உருவாக்கி வைரலாக்குகின்றனர் என்ற சமயோதியம் இல்லாமல், 80கள் போன்று டீக்கடையில் உட்கார்ந்து பேசும் அரசியல் என நினைத்து அவர் செய்யும் காரியங்கள் தற்போது அவருக்கு பெரும் பின்னடைவையே கொடுக்கிறது. 

ராஜகண்ணப்பன் கட்டுப்பாட்டில் இருந்த சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் ரூ.35 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டது. நடராஜன், தனது துறையில் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற தகுதியுடையவர்களிடன் 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் நடந்த ரெய்டு தான் இது. இதனைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி, அதாவது ராஜகண்ணப்பனின் பிறந்தநாளன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வீடேறி வந்திக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். அப்போது ராஜகண்ணப்பன் மட்டும் சோபாவில் அமர்ந்தும்,  பிளாஸ்டிக் சேரில் திருமாவளவன் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி சாதிய பாகுபாட்டுடன் தான் ராஜகண்ணப்பன் இப்படி செய்தார் என குற்றச்சாட்டுகள் எழுந்து பெரும் கலங்கத்தை உண்டாக்கியது. பின் திருமாவளவனே விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில் அந்த சர்ச்சை ஓய்ந்தது.

அரசு பேருந்து பயண வழிகளில் நிறுத்தப்படும் உணவகங்களில் சைவ உணவு மட்டும்தான் என அரசாணை வெளியாகி சர்சையானது  பின் அந்த சைவ/அசைவ என்று மாற்றப்பட்டது. முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயர் சொல்லி திட்டியதாக புகார் எழுந்த நிலையில் அமைச்சர் இலாகா மாற்றப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை வழங்கப்பட்டது. திருவாடானை தொகுதி முன்னேறாமலே இருப்பதற்கு  காங்கிரஸ்தான் காரணம் என்றும் அத்தொகுதி எம்.எல்.ஏவை கடுமையாக விமர்சனம் செய்ததற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கே.ஆர்.ராமசாமி கடும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும் மேடைகளில் கண்ணப்பன் இனி இந்தத் தொகுதியை கூட்டணிக்கு கொடுப்பதாக இல்லை, நாங்க தான் போட்டியிடுவோம் எனக் கூறி காங்கிரசுடன் மனக்கசப்பை ஏற்படுத்தினார். மேலும் சீட்டு வாங்கவே கட்சி நடத்துகிறது காங்கிரஸ் என பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

2022 ல் சாயல்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்வார்கள். அரசுக்கும் அது தெரியும். விமர்சனங்கள் செய்கிறார்கள் என்பதற்காக வீடு வீடாக சென்று எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாத்திரங்களை துலக்க முடியாது என்று பேசியது மேலும் சர்ச்சையானது. 2023 ஜூன் மாதம் நிகழ்ச்சியொன்றில் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனிக்கும் ராஜகண்ணப்பனுக்கும் நேரடியாக வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் ஒருமையில் பேசி தள்ளுமுள்ளு ஏற்பட்டு கடைசியில் மாவட்ட ஆட்சியர் தள்ளிவிடப்படார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியினர் சின்னம் குறித்து பேசியது மற்றும் அமைச்சர் கே.என்.நேரு தனது மகனை சித்து வேலை பார்த்தாவது ஜெயிக்க வச்சிருவாருனு என்று பேசிய வீடியோ  வைரலானதும் குறிப்பிடத்தக்கது. 

சட்டமன்ற கூட்டத்தொடர் சர்ச்சை:

ஜூன் 20 முதல் ஜூன் 29 வரை நடந்த மானிக்கோரிக்கையில் பேசிய ராஜகண்ணப்பன், சாதி ரீதியாக பேசிய பேச்சுக்கு சபாநாயகர் அப்பாவு கண்டித்து விட்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். மேலும் தேவையில்லாமல் திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளர் குறித்த பேச்சும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. போன், சிசிடிவி, கேமரா என இணைய உலகத்தில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பது போல சபை நடவடிக்கை முழுவதும் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது என்பதை மறந்து உறுப்பினர்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட இணையத்தில் ஊதி பெரிதாக்கப்படுகிற சூழலில் சபையில் குப்பை தொட்டியில் எச்சில் துப்பிய வீடியோ மேலும் எதிர்க்கட்சிகளுக்கு அவல் திண்பது போல ஆகிவிட்டது. 

அதிரடியில் ஸ்டாலின் :

2023 திமுக பொதுக்குழுவில் பேசிய மு.க.ஸ்டாலின் ‘ஒரு பக்கம் தி.மு.க. தலைவர்; இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் முதல்வர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைபோல இருக்கிறது என்னுடைய நிலைமை. இத்தகைய சூழலில் இருக்கக் கூடிய என்னை மேலும் துன்பப்படுத்துவது போல கட்சி நிர்வாகிகளோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது?கட்சிக்காரர்கள் யாரும் புது பிரச்னையை உருவாக்கியிருக்கக் கூடாது என்ற நினைப்போடுதான் நாள்தோறும் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் தூங்கவிடாமலும் செய்கிறது என்று பேசிய பிறகும் இவ்வாறு சிலரின் அட்ராசிட்டி தாங்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறது திமுக தலைமை. இந்நிலையில் கட்சி ரீதியாகவும் நிரவாக அதிரடி மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாக வெளியான தகவலையடுத்து, மீண்டும் நாசர் அமைச்சரவையில் எண்ட்ரி புதியவர்களுக்கு அமைச்சரையில் வாய்ப்பளிக்கும் பட்சத்தில் 2026 தேர்தலை எதிர்கொள்ள எளிதாக இருக்கும் கூறப்படுகிறது. அந்தவகையில் ஹிட் லிஸ்ட்டில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பெயரும் அடிபடுவதாக அறிவாலய வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

-மா.நிருபன் சக்கரவர்த்தி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow