மணிப்பூர்… மணிப்பூர்.. என முழங்கிய எதிர்க் கட்சியினர்… தொடர்ந்து உரை நிகழ்த்திய பிரதமர் மோடி!
மக்களவையில் எதிர்க் கட்சியினரின் தொடர் முழுக்கங்களுக்கு இடையே பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
டெல்லி: நேற்றைய நாடாளுமன்ற நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியையும் பாஜக உறுப்பினர்களையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்றைய தினம் மக்களவையில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் பிரதமர் மோடி அவைக்குள் நுழைந்ததும் எதிர்க் கட்சியினர் முழக்கமிடத் தொடங்கினர். முக்கியமாக மணிப்பூர் பிரச்சினை குறித்து மோடி பேச வேண்டும் என இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் அவர்களது கோரிக்களை நிராகரித்த பிரதமர், கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டார்.
சிவனின் அபய முத்திரை, அயோத்தி ராமர் கோயில், நீட் தேர்வு, அக்ன்வீர் திட்டம் என நேற்றைய ராகுல் காந்தியின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அப்போது அவர், பிரதமர் ஏன் மணிப்பூருக்குச் செல்லவில்லை எனக் கேள்வி எழுப்பியிருந்தார். மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி தானே என கேட்ட அவர், அங்கு உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் பொறுத்தவரை மணிப்பூர் ஒரு மாநிலமே இல்லை என்றும் ஆதங்கமாக பேசியிருந்தார். அதேநேரம் ராகுல் காந்தி நேற்று பேசியதில் சிலவற்றை அவை குறிப்பில் நீக்கினார் சபாநாயகர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்திருந்த ராகுல் காந்தி, தான் பேசியது அனைத்தும் உண்மையே என கூறினார். மேலும் எனது உரையை நீக்கினால், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசியதையும் நீக்க வேண்டும் என்றிருந்தார்.
இந்த நிலையில் தான் இன்றைய தினம் அவை கூடியதும் இதற்கெல்லாம் பிரதமர் மோடி பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோடி உரை தொடங்கும் முன்பிருந்தே எதிர்க் கட்சியினர் முழக்கமிடத் தொடங்கினர். மணிப்பூர் மணிப்பூர் என அவர்கள் முழுக்கமிட, அதனை பொருட்படுத்தாது பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். ஏழைகளின் நலனுக்காக நாங்கள் செயல்பட்டதற்கு மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர். மக்களவையில் தோல்வியடைந்த எதிர்க் கட்சிகள் பிதற்றுவது கண்கூடாகத் தெரிகிறது எனக் கூறினார். மேலும், உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்றும் நேரம் வந்துவிட்டது. 2047ம் ஆண்டை மனதில் வைத்தே இப்போது திட்டங்களை தீட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதேபோல், மக்களின் வளர்ச்சி கனவு நனவாகும், ஊழல் செய்ய போட்டி போட்டனர், ஆனால் ஊழல் ராஜ்ஜியங்கள் ஒழிக்கப்பட்டன எனவும் பதிலடி கொடுத்தார் பிரதமர் மோடி. 2014க்கு முன்பு நாட்டில் தீவிரவாத தாக்குதல் அதிகமாக நடந்தது, அதன்பின்னர் தீவிரவாதிகளை அவர்களின் நாட்டிற்கே சென்று தாக்கியதாக, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை குறிப்பிட்டு பேசினார் பிரதமர் மோடி. மேலும் இந்திய பொருளாதாரத்தை 3வது இடத்திற்கு கொண்டு செல்ல இலக்கு நிர்ணயித்து உழைத்து வருகிறோம் என்றார். அதேபோல் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள நாங்கள் 3 மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம். இந்தியா கூட்டணி கட்சியினர் எதிர்க் கட்சி வரிசையிலேயே அமர வேண்டும் என்பதே மக்களின் தீர்ப்பாக அமைந்துள்ளது என்றார்.
மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி நேர்மையாக புரிந்துகொள்ள வேண்டும்; கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளை ஒட்டுண்ணி போல காங்கிரஸ் கவர்ந்துவிட்டதாகவும் மோடி விமர்சித்தார். அதனையடுத்து ராகுலை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, நேற்று மக்களவையில் பேசிய ராகுல் காந்தி குழந்தைத்தனமாக நடந்துகொண்டார் எனக் கூறினார். மேலும், ஜாமினில் தான் விடுவிக்கப்பட்டுள்ளோம் என்பதை ராகுல் காந்தி நினைவில் கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்தார். அனைத்து தேர்தல்களிலும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் தான் ரகுல் காந்தி, தற்போது அனுதாபத்தை பெற புதிய நாடகத்தை நடத்துவதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார். மோடி உரை நிகழ்த்தி முடியும் வரையும் எதிர்க் கட்சியினர் தொடர்ந்து முழக்கமிட்டுக்கொண்டே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?