சென்னை: திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கான்வென்ஷன் சென்டரில் இன்று இரண்டாவது கட்டமாக விஜய் கல்வி விருது விழா நடைபெறுகிறது. 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையும் கல்வி விருதும் வழங்கி வருகிறார் விஜய். ஜூன் 28ம் தேதி முதற்கட்ட விருது விழா நடைபெற்று முடிந்ததை அடுத்து, இன்று இரண்டாவது கட்டமாக விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், புதுச்சேரி மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் முதல் மூன்று இடம் பிடித்த 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். அதன்படி, சுமார் 740க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர்களுடன் சேர்த்து மொத்தம் 3500 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளனர்.
காலை 10 மணிக்கு விழா அரங்கிற்குள் என்ட்ரியான விஜய், திருநங்கை மாணவி நிவேதா அருகில் அமர்ந்தார். அதன்பின்னர் மேடையேறிய விஜய் வழக்கம்போல தனது ஸ்டைலில் பேச்சை தொடங்கினார். இளம் சாதனையாளர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தமிழக வெற்றிக் கழக தோழர்களுக்கும் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா நண்பிகள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய பணிவான வணக்கங்கள் என தொடங்க, அந்த அரங்கமே ஆர்ப்பரித்தது. இதனையடுத்து முக்கியமான ஒரு விஷயம் பற்றி கண்டிப்பாக பேச வேண்டியுள்ளது. இதனை இப்போது பேசாமல் போனால் நன்றாக இருக்காது எனக் கூறிய அவர், நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து சரவெடியாக வெடித்தார்.
முதலில் நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் எனக் கூறிய விஜய், அதனை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தார். அதன்பின்னர் 1975 ஆம் ஆண்டு கல்வி மாநில பட்டியலில் தான் இருந்தது, இது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதன்பிறகு ஒன்றிய அரசு வந்த பிறகு அது பொதுபட்டியலில் சேர்த்தார்கள். அதுதான் முதல் பிரச்சினையாக இருந்தது, ஒரே நாடு ஒரே பாடத்திட்டங்கள் ஒரே தேர்வு அடிப்படையில் கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிரான விஷயமாக நான் பார்க்கிறேன். மாநில உரிமைகளுக்கு மட்டும் நான் இதை கேட்கவில்லை, மாநிலத்திற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். பன்முகத்தன்மை என்பது பலம் தானே தவிர பலவீனம் கிடையாது. மாநில சிலபஸில் படித்துவிட்டு என்சிஇஆர்டி சிலபஸில் தேர்வு வைத்தால் அது எப்படி என கேள்வி எழுப்பினார்.
மேலும், கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களின் மருத்துவ கனவை சற்று யோசித்துப் பாருங்கள், எவ்வளவு கடினமான ஒரு விசயம். மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது அதில் சில குளறுபடிகள் நடந்தது என்பதை செய்திகளில் பார்த்தோம். அதன் பிறகு நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மையே மக்களுக்கு சுத்தமாக போய்விட்டது. நீட் தேர்வு நாடு முழுவதும் தேவையில்லை என்பது தான் நாம் புரிந்து கொண்ட ஒன்று. நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஒன்றிய அரசு காலம் தாமதம் செய்யாமல் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதனை சீக்கிரமாய் சரி செய்ய வேண்டும் என்றார். அதேபோல், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவருதான் இதற்கு நிரந்தர தீர்வு. அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சிறப்பு பொதுப் பட்டியல் கொண்டுவந்து கல்வி, சுகாதாரத்தை அதில் சேர்க்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய விஜய், பொதுப்பட்டியலில் என்ன பிரச்சினை என்று பார்த்தால் அது மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.\ மாநில அரசுகளுக்கு அந்த முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் உள்ள எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளுக்கு வேண்டுமென்றால் அவர்கள் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம். ஆனால் இங்கு என்ன பிரச்சினை என்றால், நான் ஒரு ஆலோசனை சொல்கிறேன் இது நடக்குமா நடக்காதா என்று தெரியவில்லை அப்படியே நடந்தாலும் அது நடக்க விடமாட்டார்கள் என்று எனக்கு தெரியும், இருந்தாலும் நீட் குறித்த என் கருத்தை நான் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். Learning is fun... Education is celebration... ஜாலியா படிங்க... அழுத்தம் எடுத்துக்காதீங்க இந்த உலகம் மிகவும் பெரியது வாய்ப்புகள் நிறைய இருக்கிறது நிறைய கொட்டி கிடக்கிறது. ஏதாவது ஒன்று இரண்டு தவறவிட்டாலும் மொத்தத்தையும் விட்டு விடாதீர்கள், இன்னொரு பெரிய வாய்ப்பை கடவுள் உங்களுக்காக வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் என்று அர்த்தம். அது என்னவென்று தேடி கண்டுபிடியுங்கள், நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் என தனது உரையை நிறைவு செய்தார்.
இதில் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என விஜய் குறிப்பிட்டு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தனது அரசியல் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த போது, அவர் பாஜகவின் பி டீம் என விமர்சனங்கள் எழுந்தன. தமிழ்நாட்டில் மக்களிடம் செல்வாக்கு பெற முடியாத பாஜக, முதலில் ரஜினியை அரசியலில் களமிறக்க முடிவு செய்தது. அவர் கடைசி நேரத்தில் அரசியலுக்கு வரப்போவதில்லை என யூடர்ன் அடித்துவிட்டார். அவரது அப்டேட்டட் வெர்ஷனாக விஜய்யை பயன்படுத்த பாஜக முயன்று வருகிறது. விஜய்யும் பாஜகவின் வலையில் சிக்கிவிட்டார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல் திமுகவுக்கு எதிரான பிம்பமாக தான் விஜய் அரசியலில் செயல்படுவார் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் தான் இன்றைய கல்வி விருது விழாவில் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதாக ஆதரிக்கிறேன் என விஜய் கூறியுள்ளார். அதேபோல், திமுக ஸ்டைலில் மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பேசியுள்ளார் விஜய். அவரது இந்த மாற்றங்கள் அரசியல் ரீதியாக பெரும் மாற்றத்தை ஏற்படுத்துமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 28ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட விருது விழாவில், போதை பழக்கங்களை தடை செய்ய தமிழ்நாடு அரசு தவறிவிட்டதாக விஜய் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஒன்றிய அரசு என அழுத்தமாக மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ள விஜய், தான் பாஜகவுக்கு எதிரானவன் தான் தமிழ்நாட்டு மக்களிடம் உணர்த்த முயற்சிக்கிறாரா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறவில்லை. இதையெல்லாம் கவனித்து தான் விஜய்யும் பாஜகவுக்கு எதிரான அரசியல் பிம்பத்தை கட்டமைக்கிறார் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர். திமுக வழியில் விஜய்யும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு பாஜகவினர் எந்த மாதிரி ரியாக்ட் செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேபோல் தவெக நிர்வாகிகளை தோழர்கள் என விஜய் குறிப்பிட்டதும் அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்துள்ளது.