Vaazhai Movie : ''மாரியின் கழுத்தைத் தடவி விடவேண்டும்''... இயக்குநர் வசந்தபாலன் நெகிழ்ச்சி பதிவு...

Director Vasanthabalan Greetings Mari Selvaraj for Vaazhai Movie : இரு சிறுவர்களும் வாழைத் தார்களை சுமந்து வரும் காட்சி பார்க்க முடியாமல் விழிகளை மூடிக்கொண்டேன். அந்த சிறுவனின் கழுத்தைத் தடவி விடவேண்டும்; மாரியின் கழுத்தையும் தான் என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

Aug 26, 2024 - 14:34
Aug 26, 2024 - 22:42
 0
Vaazhai Movie : ''மாரியின் கழுத்தைத் தடவி விடவேண்டும்''... இயக்குநர் வசந்தபாலன் நெகிழ்ச்சி பதிவு...
வாழை திரைப்படம் குறித்து இயக்குநர் வசந்தபாலன் நெகிழ்ச்சி

Director Vasanthabalan Greetings Mari Selvaraj for Vaazhai Movie : இயக்குநர் மாரி செல்வராஜின் நான்காவது படைப்பாக வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘வாழை’. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் திரைப்படங்களை தொடர்ந்து வெளியான இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனது பள்ளிப் பருவத்தில் நடந்த ஒரு துயரமான சம்பவத்தை பின்னணியாக வைத்து வாழை படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ்.

இந்நிலையில் வாழை திரைப்படத்துக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரைத்துறையினர் அரசியல் பிரமுகர்கள் கூட வெகுவாக பாராட்டி வருகின்றனர். இயக்குநர் பாலா, இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இசையமைப்பாளர் ஏ.ஆர்,ரஹ்மான், நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் வசந்தபாலன் வாழை திரைப்படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள இயக்குநர் வசந்தபாலன், ”விளைய வைக்கும் அல்லது உருவாக்குகிற எதையும் உபயோகப்படுத்துற உரிமை உழைப்பாளிக்கு இல்லை. கடல் போல வாழை விளைந்து கிடந்தாலும், ஒற்றை வாழைப்பழத்தை திண்கிற உரிமையில்லாம சிவனனைந்தன் அடிபடும் போதும் கண்ணீரோடு ஓடும்போது அவனுடன் சேர்ந்து நாமும் ஓடுகிறோம்.

மேலும் படிக்க: 'அற்புதமான அனுபவம் கிடைக்கும்’.. வாழைக்காக உருகிய விஜய் சேதுபதி...

வெறும் ஒரு வாழைப்பழத்திற்கு பின்னாடி இத்தனை பெருங்கதையும் அழுகையும் இருக்கா???

மிக குறைவாக நாம் மதிக்கிற ஒரு சிறு வாழைப்பழத்தின் துளி தித்திப்பின்றி தான் வாழை நம் கைகளில் தவழ்கிறதா? இனியான வாழ்வில் குற்றவுணர்வின்றி எப்படி வாழைப்பழம் சாப்பிடப்போகிறேன் என்று தெரியவில்லை. அந்த பெரிய விபத்து நடக்காமல் போனாலும் இதுவொரு அழுத்தமான பதிவு தான் என்று தோன்றுகிறது.

மனசுக்குள் எப்போதும் மினுங்கி கொண்டிருக்கும் பால்யத்தை தொலைத்து விடாமல் அந்த ஆச்சரியங்களுடனும் சகதியுடனும் அழுகையுடனும் பசியோடும் மாரி செல்வராஜ் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். பாதவத்தி என்பவள் முலைக்காம்பை பச்சைப்பிள்ளையின் வாயிலிருந்து உருவியெடுத்துவிட்டு காட்டு வேலை பார்ப்பவள். அந்த வார்த்தையின் அர்த்தத்திற்கு ஒரு கதையிருக்கிறது என்றால் அது வாழை.

தாதுவருடப்பஞ்சத்துயரத்திற்கு நல்லதங்காள் கதை எப்படியொரு படிமமோ அது போன்று பாதவத்தி வார்த்தைக்கு வாழை ஒரு படிமம். பாதவத்தி பாடலைக் கேட்கும் போது தொண்டைக்குள் முட்டிக்கொண்டு நின்றிருந்த துக்கம் கரையுடைந்து கண்ணீராக வெளிவருகிறது. சந்தோஷ் நாராயணன் இந்த திரைப்படத்தின் இன்னொரு கதாநாயகனாக நின்று படத்தை தன் இசையில் தாலாட்டுகிறார்.

மேலும் படிக்க: ‘வாழை’க்கு திருமாவளவன் வாழ்த்து.. மாரி செல்வராஜின் வீட்டில் விருந்து..

இரண்டு வாழைத்தார்களை சிவனனைந்தன் சுமக்கும் போது பள்ளி விடுமுறை நாட்களில் நான் பலசரக்குக் கடையில் வேலை பார்த்தது நினைவுக்கு வந்தது. ரெண்டு வாழைத்தாரை நடித்த சிறுவன் பொன்வேல் எப்படி தலையில் சுமந்தான் என்று தெரியவில்லை. அந்த இரு சிறுவர்களும் வாழைத் தார்களை சுமந்து வரும் காட்சி பார்க்க முடியாமல் விழிகளை மூடிக்கொண்டேன்.

எத்தனை வன்முறை கொப்பளிக்கும் காட்சி. அந்த சிறுவனின் கழுத்தைத் தடவி விடவேண்டும்; மாரியின் கழுத்தையும் தான். துயரம் அப்பிய வாழ்வில் டீச்சர் மீதான இனம் புரியாத அன்பு படம் பார்க்கும் பார்வையாளர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. காணாமல் போன மாட்டை ராஜவேல் தேடி ம்மா.. ம்மா.. என்று கத்தி காடு மேடெல்லாம் திரியும் போது எப்படியாவது அந்த மாடு கிடைத்து விடவேண்டுமே என்ற பரிதவிப்பு ஏற்படுகிறது.

தேனி ஈஸ்வர் தன் கேமராவோடு வாழைத்தோட்டத்திற்குள் உருண்டு புரண்டு ஓடி அழகியலை பதிவு செய்துள்ளார். எப்போதுமே ஈரானிய சினிமா சிறுவர்களின் மனஉலகத்தை மிக அற்புதமாக பதிவு செய்யும். தமிழில் அப்படியொரு முயற்சி. மாரிசெல்வராஜ்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow