அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. பிரபல இயக்குநருக்கு லிங்குசாமி கொடுத்த டார்ச்சர்

இயக்குநர் லிங்குசாமியால், தான் பல வேதனைகளை அனுபவித்ததாக இயக்குநர் வசந்த பாலன் மனம் திறந்துள்ளார்.

Nov 22, 2024 - 03:59
Nov 22, 2024 - 06:00
 0
அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. பிரபல இயக்குநருக்கு லிங்குசாமி கொடுத்த டார்ச்சர்
வசந்தபாலன் - லிங்குசாமி

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘அமரன்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த ராணுவப் படை வீரர் மேஜர் முகுந்தின்  வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ’அமரன்’ திரைப்படம் கடந்த 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முகுந்த்-ஆக நடித்த சிவகார்த்திகேயனின் நடிப்பும், இந்து ரபேகா வர்க்கீஸாக நடித்த சாய் பல்லவியின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே ‘அமரன்’ படத்தில் சாய் பல்லவி ஒரு துண்டு சீட்டில் தனது நம்பரை எழுதி சிவகார்த்திகேயனிடம் தூக்கி வீசுவார். இந்த நம்பரை பார்த்த ரசிகர்கள் பலரும் அது சாய்பல்லவியின் தொலைபேசி நம்பர் என்று தொடர்ந்து அழைத்து வந்துள்ளனர்.

இந்த அழைப்புகளால் நிஜத்தில் அந்த எண்ணை கொண்ட பொறியல் மாணவன் வாகீசன் என்பவர் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார். மேலும், படம் வெளியான நாளிலிருந்து தொடர்ந்து வரும் அழைப்புகளால் தன்னால் தூங்க முடியவில்லை, படிக்க முடியவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல், ‘அமரன்’ படக்குவினர் தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில், இந்த செய்தியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் வசந்த பாலன், தனும் இதுமாதிரியான வேதனையை அனுபவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், சண்டக்கோழி திரைப்படம் வெளியீட்டுக்கு முந்தைய நாள் சிறப்புக்காட்சியும் முதல் நாள் முதல் காட்சியும் பார்த்த நண்பர்கள் "சண்டக்கோழி திரைப்படம் பத்து ரன்!" என்று பாராட்டி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தனர். நான் லிங்குவிற்கு படம் பார்த்த நண்பர்கள் இப்படி பாராட்டி செய்தி அனுப்பியுள்ளார்கள், மாபெரும் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று குறுஞ்செய்தி அனுப்பினேன். லிங்குவும் நன்றி தெரிவித்து பதிலிட்டான்.

அச்சமயத்தில் நான் மதுரையில் வெயில் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். அன்று பரத், பாவனா சம்மந்தமான காட்சி. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை ஒட்டியுள்ள ஜனநெருக்கடியான பகுதிகளில் நடத்த திட்டமிட்டு வேலைகளில் இறங்கியிருந்தேன். நானும் கேமராவும் மறைவான இடங்களில் இருந்து கொண்டு என் அலைபேசி வாயிலாக உதவியாளர்களுக்கும், பரத்திற்கும் உத்தரவுகள் தந்தவண்ணம் இருந்தேன். 

காலை 7 மணியிலிருந்தே சம்மந்த சம்மந்தமில்லாத எண்களிலிருந்து என்னை அழைத்து நீங்க தான் நடிகர் விஷாலா?  இயக்குநர் லிங்குசாமியா?  என்றும் இடைவிடாத போன் அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. டென்சனில் ஒரு அழைப்பாளரை திட்டிவிட்டேன். அவர் தனியார் செய்தி தாளில் உங்கள் நம்பர் போட்டுருக்கு சார் என்றார். அந்த செய்தி தாளை  வாங்கி பார்த்தால் சண்டக்கோழி திரைப்பட விளம்பரத்தில் நான் லிங்குசாமிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியைப் பதிவிட்டு கீழே என் அலைபேசி நம்பரைப் போட்டிருந்தார்கள். 

அன்று படப்பிடிப்பு முடிந்து இரவு லிங்குசாமியிடம் ஏண்டா இப்படி போட்டீங்க? என்றேன். படத்தைப் பற்றிய பாராட்டுகளை இப்படி புதிய விளம்பர உத்தி வாயிலாக விளம்பரம் செய்ய முயன்றோம் என்று பதிலுரைத்தான்.  படம் மாபெரும் வெற்றி என்கிற மகிழ்ச்சியில் இருந்தான் எதற்கு இந்த நேரத்தில் என் சங்கடங்களை அவனிடம் பகிர வேண்டுமென அதைப் பற்றி பேசாமல் வாழ்த்துகளைப் பகிர்ந்து விட்டு அலைபேசியை அணைத்தேன். 

நீண்ட இரவு முழுக்க நீங்க விஷாலா? லிங்குசாமியா? என்று தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து ஒரு மாதம் வரை வந்த வண்ணம் இருந்தது. அந்த நம்பரை மாற்றிய பிறகு தான் தப்பித்தேன். நாமும் லிங்குவிடம் இழப்பீடு கேட்கலாம் போலயே… டே நண்பா! குடும்பத்தோடு கேன்டில் லைட் டின்னர் தா ! என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow