வடகிழக்கு பருவமழை... வானிலை ஆய்வாளர் வெங்கடேஷ் கொடுத்த பகீர் தகவல்!
இந்த ஆண்டு வரும் நாட்களில், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் அதிகப்படியான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வாளர் வெங்கடேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் பருவமழை பெய்துவரக்கூடிய நிலையில் வரும் நாட்களில் தமிழகத்தில் பருவமழை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் வெங்கடேஷ் குமுதம் செய்திகளுக்கு பிரத்தியேகமாக பேட்டியளித்துள்ளார். அதில் அவர், “இலங்கைக்கு கீழே உள்ள வளிமண்டல மேடுக்கு சுழற்சியின் மூலம் உருவாகக்கூடிய ஈரப்பதம் மிக்க காற்றின் குவியல் காரணமாகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் 44 சென்டிமீட்டர் அளவிலான அதிக கன மழை பதிவாகியது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தற்போதுள்ள வளிமண்டல மேலெடுக்க சுழற்சி அதே பகுதியில் நீடிக்கும். மேலும் இந்தோனேசியா கடல் பகுதிகளில் பூமத்திய ரேகை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நீடித்து வருகிறது. இது வரக்கூடிய இரண்டு நாட்களில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து வலுபெற உள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் அதனை ஒட்டிய தென் கேரள பகுதிகளில் மிதமானது முதல் கனமழை தொடரும். குறிப்பாக இரவு மற்றும் விடியற்காலை வேலைகளில் மேலே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் பலத்த மழை தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் 2 நாட்களுக்கு பிறகு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்பொழுது புயல் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது. காற்று நகர்வை பொறுத்தே புயலின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க முடியும். இதன் காரணமாக நவம்பர் மாத இறுதியில் உள்மாவட்டங்களில் 2020ஆம் ஆண்டு உருவான நிவர் புயலுக்கு இணையான புயலாக உருவாவதற்க்கும் வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் மாதம் முதல் 10 நாட்களுக்குள் ஆழ்ந்த ஆற்றலைத்த தாழ்வு நிலை உருவாகும் காரணமாக இது புயலாக வலுபெருவதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்த ஆண்டு வரும் நாட்களில் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் அதிகப்படியான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை வரும் ஜனவரி மாதம் வரை தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது. நவம்பர் முதல் வாரம் வரையிலான கணக்குப்படி இந்த ஆண்டுக்கான பருவமழையின் அளவு எதிர்பார்த்ததை விட அதிகமாகவே உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?