சென்னையில் நீண்டநேரம் மின்தடை.. இருளில் மூழ்கிய மாநகரம்.. புலம்பித் தவித்த மக்கள்!
தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. நேற்று திடீரென நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டதால், சென்னைவாசிகள் சிலர் பழைய சம்பவத்தை குறிப்பிட்டு புலம்பித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை: சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. இரவு 10 மணிக்கு ஏற்பட்ட மின்தடை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அதாவது தேனாம்பேட்டை, நந்தனம், வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், மாதவரம், அடையாறு, மந்தைவெளி, சூளைமேடு, வண்ணாரப்பேட்டை, மாதவரம் என பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கின.
மேலும் வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் என தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை என அனைத்து பகுதிகளும் மின்தடையால் இருளில் மூழ்கின. தமிழ்நாட்ட்டில் மின்விநியோகம் சீராக நடந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் மின்விநியோகம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக கனமழை நேரங்களில் மின்கம்பம் சாய்தல் உள்ளிட்ட சம்பவங்களால் மின்தடை ஏற்படும். ஆனால் நேற்று கனமழையும், பலத்த காற்றும் வீசவில்லை. இதனால் திடீரென நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டதால் சென்னைவாசிகள் என்ன நடக்கிறது என தெரியாமல் திகைத்தனர்.
சிலர் மின்வாரியங்களின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டனர். இரவு நேரம் என்பதால் அவர்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. ஏற்கெனவே சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக கொளுத்தியது. இந்த வேளையில் நீண்ட நேரம் மின்தடை செய்யப்பட்டதால் மின்விசிறிகளை இயக்க முடியாமல் கொசுக்கடி மற்றும் புழுக்கத்தில் மக்கள் சிகித்தவித்தனர். சிறு குழந்தைகள் வைத்திருப்பவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.
ஒருவழியாக சில மணி நேரத்துக்கு பிறகு சென்னையில் திடீரென மின்தடை ஏற்பட்டது ஏன்? என்ற காரணம் மக்களுக்கு தெரியவந்தது. அதாவது மணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக சென்னை மாநகரம் இருளில் மூழ்கியது தெரியவந்தது. மணலியில் துணை மின் நிலையத்தில் 400 கிலோ வாட் திறன் கொண்ட முக்கிய யூனிட்டில் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து பல இடங்களில் மின்தடை ஏற்பட காரணமாக அமைந்து விட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் மணலி துணை மின் நிலையத்துக்கு விரைந்து சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதன்பிறகு மின்விநியோகம் சீரானது. படிப்படியாக அனைத்து இடங்களுக்கும் மின்விநியோகம் செய்யப்பட்டது. இதன்பிறகே மக்கள் நிம்மதி அடைந்தனர். தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. நேற்று திடீரென நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டதால், சென்னைவாசிகள் சிலர் பழைய சம்பவத்தை குறிப்பிட்டு புலம்பித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






