தமிழ்நாடு

என் மேலயா மோதுற?... வழக்கறிஞரை ஊடு கட்டி அடித்த ரேப்பிடோ ஓட்டுநரால் பரபரப்பு!

தன் மீது மோதிய வழக்கறிஞரின் தலையை இரும்பு பைப்பால் உடைத்த ரேப்பிடோ ஓட்டுநரால் சென்னை, சூளைமேடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

என் மேலயா மோதுற?... வழக்கறிஞரை ஊடு கட்டி அடித்த ரேப்பிடோ ஓட்டுநரால் பரபரப்பு!
என் மேலயா மோதுற?... வழக்கறிஞரை ஊடு கட்டி அடித்த ரேப்பிடோ ஓட்டுநரால் பரபரப்பு!

சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் கௌதம். இவர் ரேப்பிடோ  நிறுவனத்தில் பைக் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.  நேற்று (நவ 20) இரவு கௌதம் வாடிக்கையாளர் ஒருவரை ஏற்றி வந்து சூளைமேடு, சவுராஷ்டிரா நகரில் இறக்கி விட்டு விட்டு வேறொரு சவாரிக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று கௌதம்-இன் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கௌதமிற்கு லேசான காயம் ஏற்பட்டதுடன் இருசக்கர வாகனமும் சேதமடைந்தது.

இதனையடுத்து கௌதம், விபத்து ஏற்படுத்திய நபரை பிடித்து இதுகுறித்து விசாரித்தார். அதில் அவர் மீது மோதிய நபர் வழக்கறிஞர் என்பதும், அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் மதுபோதையில் இருந்த அவரிடம்,  சேதமடைந்த வாகனத்தை சரிசெய்து தருமாறு கௌதம் கேட்டுக்கொண்டார். அப்போது மதுபோதையில் இருந்த வழக்கறிஞர் கௌதமை தகாத வார்த்தையால் திட்டியும் அவரது தாய் குறித்தும் ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கௌதம்,  அருகில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து வழக்கறிஞரின் தலையில் சரமாரியாக அடித்துத் தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்த வழக்கறிஞர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். 

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சூளைமேடு போலீசார், காயமடைந்த வழக்கறிஞரை உடனடியாக மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய வழக்கறிஞர் சூளைமேடு கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த அனந்தராமன் என்பதும் அரசு வழக்கறிஞரான இவர் தற்போது போக்குவரத்து துறையின் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து போலீசார் கௌதம் அளித்த புகாரின் பேரில் அரசு வழக்கறிஞர் அனந்தராமன் மீதும், பின்பு வழக்கறிஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கௌதம் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அனந்தராமன் அரசு வழக்கறிஞர் என்பதால் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது குறித்து போக்குவரத்து துறைக்கு முறையாக தகவல் தெரிவித்தனர். அரசு வழக்கறிஞர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து உள்ளது தொடர்பாக வழக்கறிஞர் அனந்தராமனிடம் துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.