சினிமா

'சேர்ந்து வாழ விருப்பமில்லை’.. தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவதில் உறுதி.. நவ.27-ல் தீர்ப்பு

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக விசாரணையில் தெரிவித்துள்ள நிலையில், நவ.27-ல் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

'சேர்ந்து வாழ விருப்பமில்லை’.. தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவதில் உறுதி.. நவ.27-ல் தீர்ப்பு
தனுஷ் - ஐஸ்வர்யா

இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.இதில் ஏரளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த தம்பதிக்கு லிங்கா , யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா 3, வை ராஜா வை, லால் சலாம் ஆகிய திரைப்படங்களை இயக்கி வந்தார். மேலும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருவரும் கவனம் பெற்றனர். இருவரும் 2022 ஆம் ஆண்டே பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிக்கை மூலம் அறிவித்த நிலையில், விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றனர்.  

இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா மற்றும் தனுஷை சமாதானம் செய்யும் முயற்சிகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.

இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் நவ.3ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகவில்லை.  இதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அடுத்த விசாரணைக்கு இருவரும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

விவாகரத்து வழக்கில் கடந்த 3 முறை விசாரணைக்கு அழைத்தும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆஜராகாத நிலையில், இன்று நவ.21-ல் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் நேரில் ஆஜராகினர்.

இருவரிடமும் சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி விசாரணை நடத்தினார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த விவாகரத்து வழக்கில் நவ.27-ல் தீர்ப்பு வழங்குப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.