தமிழ்நாடு

ஒரே இரவில் 15 செம்மறி ஆடு உயிரிழப்பு- அச்சத்தில் கிராம மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பண்டசீமனூர் ஊராட்சியின் மந்த காளிக்கனூர் கிராமத்தில் ஆடுகள் உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரே இரவில் 15 செம்மறி ஆடு உயிரிழப்பு- அச்சத்தில் கிராம மக்கள்
ஒரே இரவில் 15 செம்மறி ஆடு உயிரிழப்பு

காளிக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமையன் (70) என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக செம்மறி ஆடுகளை பராமரித்து வந்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டின் பின்புறம் உள்ள பட்டியில் 15 ஆடுகளை அடைத்துவிட்டு உறங்கச் சென்றார். இன்று அதிகாலை 5 மணியளவில் ஆடுகளைப் பார்க்கச் சென்ற போது, 15 ஆடுகளும் மர்ம விலங்குகளால் கடிக்கப்பட்டு இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உடனே கால்நடை மருத்துவருக்கு காலை 6:30 மணியளவில் தகவல் தெரிவித்தாலும், மருத்துவர் அல்லது கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழப்புகள் அதிகரித்தன எனக் கூறப்படுகிறது. மருத்துவரோ? ஆம்புலன்ஸோ? உடனடியாக வந்திருந்தால் இழப்பினை குறைத்திருக்கலாம் என வேதனையுடன் தெரிவித்தனர்.

வனத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை:

இதுக்குறித்து ராமையன் கூறுகையில், "மருத்துவர்கள் வந்திருந்தால் குறைந்தது 2 முதல் 4 ஆடுகளாவது சிகிச்சை மூலம் காப்பாற்றியிருக்கலாம். கால்நடை அவசர கால ஆம்புலன்ஸ்  வசதி இருந்தும் பயனில்லை" என்று கூறினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பர்கூர் போலீசார் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல், வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ஆடுகளைத் தாக்கிய விலங்கு எது என்பது தெரியவில்லை என்பதால், வனத்துறை அதிகாரிகள் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் கால்நடை பராமரிப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களுக்கு இரும்பு கூடாரங்கள் அமைத்துத் தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், "எங்களின் வாழ்வாதாரம் முடிந்துவிட்டது. எனவே, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இந்த சம்பவம், காட்டு விலங்குகளின் தாக்குதல்களால் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்களை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மேலும் இதுப்போன்ற சம்பவம் நடைப்பெறாமல் இருக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more: 3-வது கார் வாங்க போறவங்களுக்கு சிக்கல்: டெல்லி எடுக்கப்போகும் அதிரடி முடிவு