3-வது கார் வாங்க போறவங்களுக்கு சிக்கல்: டெல்லி எடுக்கப்போகும் அதிரடி முடிவு
தனிநபர்கள் வாங்கும் மூன்றாவது கார் இனி மின்சார வாகனமாக தான் இருக்க வேண்டும் என டெல்லி அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது காற்று மாசுபாடு தான். அதனை கட்டுக்குள் வைக்க ஒவ்வொரு ஆண்டும் அரசு திணறி வரும் சூழ்நிலையில் புதியதாக மின்சார வாகன கொள்கையினை உருவாக்கியுள்ளது டெல்லி அரசு. இந்த கொள்கைகள் விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கையின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாக கருதப்படுவது, இனி ஒவ்வொரு வீட்டிலும் வாங்கப்படும் மூன்றாவது கார் மின்சார வாகனமாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட உள்ளது. அதேப்போல், இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் புதைபடிவ எரிபொருளில் (பெட்ரோல், டீசல், CNG) இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படாது. மேலும், ஆகஸ்ட் 2026 முதல் மின்சாரம் அல்லாத இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்படாது எனவும் மாநில அரசு தனது மின்சார வாகனக் கொள்கை 2.0-ல் குறிப்பிட்டுள்ளதாக, பெயர் வெளியிட விரும்பாத விஷயத்தை அறிந்த அதிகாரிகள் முன்னணி நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 2025 முதல் CNG ஆட்டோரிக்ஷா பெர்மிட் புதுப்பிக்கப்படாது:
பெட்ரோல், டீசல் அல்லது CNG-யில் இயங்கும் இரு சக்கர வாகனங்களின் பதிவு ஆகஸ்ட் 2026 முதல் அனுமதிக்கப்படாது என்று மின்வாகனக் கொள்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று சக்கர வாகனப் பிரிவைப் பொறுத்தவரை, 10 ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து CNG ஆட்டோ ரிக்ஷாக்களும் பாலிசி காலத்தில் கட்டாயமாக மின்சார ஆட்டோ ரிக்ஷாக்களாக மாற்றப்படும் அல்லது மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட கொள்கையின்படி, ஆகஸ்ட் 2025-க்குப் பிறகு CNG-ல் இயங்கும் ஆட்டோரிக்ஷா அல்லது மூன்று சக்கர வாகன சரக்கு கேரியர் வாகனங்களுக்கான பதிவும் அனுமதிக்கப்படாது. மேலும் ஆகஸ்ட் 2025 முதல் எந்த CNG ஆட்டோ பெர்மிட்டுகளும் புதுப்பிக்கப்படாது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு வாகனங்களும் மின்மயமாக்கல்:
டெல்லி மாநகராட்சி (MCD), டெல்லி ஜல் போர்டு (DJB) மற்றும் பிற அரசுத்துறை அதிகாரிகளும் பயன்படுத்தி வரும் அனைத்து வாகனங்களையும் படிப்படியாக மின்சார வாகனங்களாக மாற்றவும், 2027 ஆம் ஆண்டுக்குள் 100% மின்சார வாகன பயன்பாட்டினை அடையவும் புதிய மின்வாகனக் கொள்கையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, நகரம் முழுவதும் 13,200-க்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டருக்கும் ஒரு சார்ஜிங் நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. முந்தைய மின்வாகனக் கொள்கையில் 2026 ஆம் ஆண்டுக்குள் 48,000 சார்ஜிங் பாயிண்டுகளை அமைக்க திட்டமிடப்பட்டது. அதில் 10% -க்கான பணிகள் மட்டுமே முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் பதிவுசெய்யப்பட்ட புதிய வாகனங்களில் 95%-த்தை 2027 ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனமாகவும், 2030 ஆம் ஆண்டுக்குள் 98% வாகனங்களை மின்சார பயன்பாடாகவும் இருப்பதை உறுதி செய்வதே இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
Read more: பாஸ்போர்ட் அப்ளை பண்ண போறீங்களா? இந்த 5 அப்டேட் மறக்காம தெரிஞ்சுக்கோங்க..
What's Your Reaction?






