தலைமைச் செயலகத்தில் விரிசல்?.. தலை தெறிக்க கீழிறங்கிய ஊழியர்கள்
சென்னை தலைமைச் செயலகத்தில் விரசல் ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து, ஊழியர்கள் தலை தெறிக்க ஓடிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் கொண்ட, நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளது. இது தமிழ்நாடு மாநில செயலகத்தின் அதிகார மையமாக செயல்பட்டு வருகிறது. மேலும், இங்கு அரசின் அனைத்து துறைகளின் ஊழியர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அலுவலகம் திறக்கப்பட்ட நில மணி நேரங்களிலேயே, நாமக்கல் கவிஞர் மாளிகையின் முதல் மாடியில் டைல்சில் வெடிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தீயாக பரவியது. விரிசல் ஏற்பட்டதாக திடீரென்று தகவல் வெளியானதால், அனைத்து பணியாளர்களும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இருந்து கீழே இறங்கி வீதிக்கு வந்தனர்.
தகவலறிந்து உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர், ‘பூகம்பம் என புரளி கிளப்பப்பட்டு விட்டது என்றும் இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் தகுந்த அறிவுரைகளை வழங்கினர். மேலும், கட்டிடம் நல்ல உறுதித் தன்மையோடு இருக்கிறது எனவும் தைரியமாக சென்று உங்கள் பணியைப் பார்க்கலாம் எனவும் தெரிவித்தனர்.
அதன்பிறகே ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினர். பின்னர், ‘நாமக்கல் கவிஞர் மாளிகையின் முதல் தளத்தில் ஏற்பட்டது நுண்ணிய விரிசல் தான். இதன் காரணமாக யாரும் அச்சப்படத் தேவையில்லை’ என பொறியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்றார்.
What's Your Reaction?






