Thirumalai Arrest in Armstrong Murder Case : தமிழ்நாட்டையே உலுக்கிய அரசியல் கொலைகளில் ஒன்று தான் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம். இந்த வழக்கில் கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு (39), பெரம்பூரைச் சேர்ந்த திருமலை (45), திருவள்ளூர் ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த மணிவண்ணன் (26), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33), திருநின்றவூரைச் சேர்ந்த ராமு என்கிற வினோத் (38), ராணிப்பேட்டை, காட்பாடியைச் சேர்ந்த சந்தோஷ் (22), திருநின்றவூரைச் சேர்ந்த அருள் (33), செல்வராஜ் (48) ஆகிய எட்டுபேரை செம்பியம் போலீஸார் கைது செய்திருந்தனர்.
இதில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மீது எட்டு வழக்குகளும், திருமலை மீது ஏழு வழக்குகளும் பதியப்பட்டது. இதில் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி குறித்து தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும் பெரம்பூரைச் சேர்ந்த திருமலையும்தான் முக்கியமானவர்கள் எனவும், இவர்கள் இருவருக்கும் சிறையில் நட்பு ஏற்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தனர். மேலும், சிறையில் இருந்தபோது ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வது தொடர்பாக இருவரும் திட்டம் போட்டிருக்கிறார்கள். சிறையிலிருந்து வெளியில் வந்த திருமலை, ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங், திருமலைக்கும் அதே ஊர் தான். அதனால் ஆம்ஸ்ட்ராங், வீட்டின் அருகில் உள்ள பள்ளி பகுதியில் ஆட்டோவை சவாரிக்காக நிறுத்துவதைப் போல நின்று ஆம்ஸ்ட்ராங்கின் நடவடிக்கைகளை கண்காணித்து பாலுவிடம் தெரிவித்து வந்திருக்கிறார் எனவும் தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர்
இதையடுத்துதான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நேரம் பார்த்து காரியத்தை இந்தக் கும்பல் கச்சிதமாக முடித்ததாகவும், ஆம்ஸ்ட்ராங் வசிக்கும் பகுதியில் வெளிநபர்கள் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. அதனால் உணவு டெலிவரி செய்வதைப் போல நடித்து ஆம்ஸ்ட்ராங்கை பிளான் போட்டு கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் தெரிவித்தனர்.
மேலும், ஆம்ஸ்ட்ராங், பாக்ஸராக இருப்பதால் அவரால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை எளிதில் சமாளிக்க முடியும். அதனால்தான் கொலையாளிகள், ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பி அவரின் கணுக்காலில் வெட்டி நிலை குலைய வைத்து கழுத்திலேயே வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள் என தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர்
மேலும் படிக்க: பாக். அணிக்கு கண்ணீர் அஞ்சலி... போஸ்டர் ஒட்டாத குறையாக கலாய்க்கும் ரசிகர்கள்..
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த திருமலை என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் பூந்தமல்லி போலீசார் உடனடியாக திருமலையை பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.