சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தை, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் மூவியாக உருவாகியுள்ள அமரன், வரும் 31ம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு ரிலீஸாகிறது. தமிழில் உருவாகியுள்ள அமரன், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் மொழிகளிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமரன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
அமரன் படத்தின் தமிழ் ட்ரெய்லரை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதேபோல், இந்தியில் அமீர்கானும், கன்னடத்தில் சிவராஜ்குமாரும் வெளியிட்டுள்ளனர். மலையாளத்தில் டொவினோ தாமஸ், தெலுங்கில் நானி ஆகியோர் சிவகார்த்திகேயனின் அமரன் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வீடியோவுடன் தொடங்கும் இந்த ட்ரெய்லர், ஆக்ஷனில் அனல் பறக்கிறது. கோலிவுட் ஹீரோக்களுக்கு காஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடும் படங்கள் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி.
கேப்டன் விஜயகாந்த், அர்ஜுன், கமல், விஜய் வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் அதில் இணைந்துள்ளார். ஆர்மிதான் தனது வாழ்க்கை என முடிவு செய்யும் சிவகார்த்திகேயன், கடைசியாக நாட்டுக்காகவே வீரமரணம் அடைகிறார். மேஜர் முகுந்தின் பயோபிக் மூவியாக அமரன் உருவாகியுள்ளதால், கதையும் காட்சிகளும் உண்மைச் சம்பவங்களை போல எடுக்கப்பட்டுள்ளன. அமரன் ட்ரெய்லர் முழுக்க முழுக்க ஆக்ஷனில் தெறிக்கவிட்டாலும், சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இடையேயான காதல் காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோரது நடிப்பை தவிர்த்து, CH சாயின் ஒளிப்பதிவு, ஜிவி பிரகாஷின் பின்னணி இசை, சண்டைக் காட்சிகள் ஆகியவையும் அமரன் படத்துக்கு செம ஹைப் கொடுத்துள்ளது. அதேபோல் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்களும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளன. சிவகார்த்திகேயன் முதன்முறையாக ஆர்மி ஆபிஸர் கேரக்டரில் நடித்துள்ளதால், அமரன் படம் ரசிகர்களுக்கு வெரைட்டியான ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமரன் ட்ரெய்லர் சூப்பராக இருப்பதாக கமெண்ட்ஸ் செய்து வரும் ரசிகர்கள், சிவகார்த்திகேயனுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாக சிவகார்த்திகேயனின் அமரனுடன், ஜெயம் ரவியின் பிரதர், கவின் நடித்துள்ள பிளடி பெக்கர், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படங்களும் ரிலீஸாகின்றன. இந்த 4 படங்களுமே வேறு வேறு ஜானரில் உருவாகியுள்ளதால், ரசிகர்களுக்கு வெரைட்டியான தீபாவளி ட்ரீட் காத்திருக்கிறது.